`சொல்லுங்க அண்ணே ஏதாவது வேணுமா!’- வேலூர் சிறைக்காவலர்களால் குதூகலிக்கும் கைதிகள் | Prisoners in Vellore jail getting all the things they wanted

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (14/01/2019)

`சொல்லுங்க அண்ணே ஏதாவது வேணுமா!’- வேலூர் சிறைக்காவலர்களால் குதூகலிக்கும் கைதிகள்

`சொல்லுங்க அண்ணே ஏதாவது வேணுமா!’- வேலூர் சிறைக்காவலர்களால் குதூகலிக்கும் கைதிகள்

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குக் கஞ்சா, சிகரெட், செல்போன் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதால், தண்டனையைக்கூட அவர்கள் ஜாலியாக அனுபவிப்பதாகப் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

வேலூர் மத்திய சிறை

வேலூர் மத்திய சிறையில் கைதிகள் சுகபோகமாக தண்டனையை அனுபவிக்கிறார்கள். சிறைக்குள் கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள்கள் எளிதில் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, வெளியில் உள்ள கூட்டாளிகளிடம் பேசுவதற்கு புது சிம்கார்டு போடப்பட்ட செல்போனும் வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கைதிகளுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற பல கேள்விகளுக்கு ஒற்றை விடை, சிறைக்காவலர்கள்தான். கைதிகளுக்குத் தேவையானவற்றை சிறைக்காவலர்களே செய்து கொடுப்பதாகப் புகார் கூறப்படுகிறது.

குறிப்பாக, விசாரணைக் கைதிகளாக அடைக்கப்படும் ரவுடிகளுக்கு விஸ்வாசமாக தொண்டு செய்கிறார்கள் சிறைக்காவலர்கள். ரவுடிகள் வெளியில் இருப்பதைவிடவும் சிறைக்குள்தான் ராஜாங்கம் செய்கிறார்கள். ‘சொல்லுங்க அண்ணே ஏதாவது வேணுமா...’ என்று கேட்கும் அளவுக்குக் கைதிகளிடம் நெருங்கிப் பழகுகிறார்களாம் சிறைக்காவலர்கள். இதுபோன்ற புகார்கள் வேலூர் ஆண்கள் சிறையில் மட்டுமல்ல, பெண்கள் சிறையிலும் தற்போது ‘ஈயாக’ மொய்க்கின்றன. பெண்கள் சிறைக்குள் செல்போன் மட்டுமன்றி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கின. 

அதைத்தொடர்ந்து, இரண்டாம் நிலை பெண் காவலர் ஒருவர் ஜாக்கெட்டுக்குள் செல்போனை மறைத்துச் சிறைக்குள் கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டார். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, வேலூர் ஆண்கள் சிறையிலும் அடுத்தடுத்து ஏராளமான செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த மாதம், வேலூர் ஆண்கள் சிறையில், கைதியிடம் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் கொடுத்த சிறைக்காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறையில் சட்டவிரோதமான விதிமீறல்கள் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றன.

வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``கள்ளன் பெரியவனா அல்லது காப்பகன் பெரியவனா என்று பார்த்தால் கள்ளன்தான் பெரியவன். நாம ஒரு வழியை அடைத்தால், கள்ளன் இன்னொரு வழியை உருவாக்குவான். அதுபோலதான், சிறைக்குள் நாங்கள் ஒவ்வொரு விதிமீறல்களை தடுக்கும்போது, கைதிகள் புதுப் புது வழியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். சிறைக்குள் ரவுடிகள் ராஜாங்கம் செய்வதில்லை. நாங்கள், அடாவடி செய்யும் கைதிகளையும் மனுஷன்களாகத்தான் பார்க்கிறோம். ரவுடிகளையும், சக கைதிகளை போலத்தான் நடத்துகிறோம். அதனால்தான், முக்கியக் குற்றவாளிகளை கூட வேலூர் மத்திய சிறையில் அடைக்கிறார்கள்" என்றனர்.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை உயரதிகாரிகள் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, சிறையில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.