வலது கையில் வாள்... இடது கையில் கேடயம்..! - மான் கொம்பை சுழற்றி அசத்திய தமிழிசை | tamilisai celebrate pongal at party office

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/01/2019)

கடைசி தொடர்பு:16:20 (14/01/2019)

வலது கையில் வாள்... இடது கையில் கேடயம்..! - மான் கொம்பை சுழற்றி அசத்திய தமிழிசை

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். 

தமிழிசை

மேலும், தமிழரின் பாரம்பர்யக் கலையான வாள் வீசியும், மான் கொம்பால் சண்டை போட்டும், ட்ரம்ஸ் வாசித்தும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ மோடியை விமர்சிப்பது, தமிழகத்தில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என விமர்சனம் செய்வது கிண்டல், கேலி செய்வது போன்றவை இந்த போகியோடு போகவேண்டியது. 

தமிழிசை

நாளை முதல், பா.ஜ.க பலம் பொருந்திய கட்சியாக உள்ளது என்பதை தமிழக மக்கள் உணரும்படி  எங்களின் நடவடிக்கை இருக்கும். தமிழகப் பொறுப்பாளர்களாக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே எங்களின் ஆதரவு. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளது.

தமிழிசை

இதையேதான் காணொளிக் காட்சிமூலம் தமிழக உறுப்பினர்களிடம் பேசும்போதும் கூறினார். மேகதாது விவகாரத்தில் அணைகட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட தமிழகத்துக்கு வரும் பிரதமர், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கல் மலரட்டும், தாமரை மலர்போல அனைவரின் வாழ்வும் மலர பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.