ஜல்லிக்கட்டு வழக்கை திரும்பப் பெற கோரினால், கைதுசெய்வதா..? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்... | TN government refused to withdraw Jallikattu cases against us - accuse activists

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (14/01/2019)

கடைசி தொடர்பு:19:16 (14/01/2019)

ஜல்லிக்கட்டு வழக்கை திரும்பப் பெற கோரினால், கைதுசெய்வதா..? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்...

ஜல்லிக்கட்டு நாயகன் என்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் தமிழக ஆட்சியாளர்கள்,

ஜல்லிக்கட்டு வழக்கை திரும்பப் பெற கோரினால், கைதுசெய்வதா..? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்...

"ல்லிக்கட்டு நாயகன் என்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் தமிழக ஆட்சியாளர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கப் போராடியவர்கள்மீது வழக்குகள் போட்டு அலைக்கழித்துவருகிறார்கள். 'இந்த வழக்குகளை ரத்துசெய்யுங்கள்' என்று கோரிக்கை மனு அளிக்கச் சென்ற எங்களை எந்தக் காரணமும் இல்லாமல் கைதுசெய்து, அரசு நாடகமாடுகிறது" என்று குற்றம் சாட்டுகிறார்கள் ஜல்லிக்கட்டுப் போராட்ட ஆர்வலர்கள்.

முகிலன் - ஜல்லிக்கட்டு வழக்கை திரும்பப் பெற கோரிக்கை

மதுரை கலெக்டரிடம் ஜனவரி 11-ம் தேதி மனு கொடுக்கச் சென்ற முகிலன், ராசு, குமரன், மேரி, காந்தி, சூசை, கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர். இதுபற்றி  ஜல்லிக்கட்டுப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் முகிலன், "கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் மக்கள் போராடினார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம் பெருங்குடியிலும் போராட்டம் நடந்தது.

ஜல்லிக்கட்டுக்காக 2017 ஜனவரி 23-ம்  தேதியன்று சிறப்புச் சட்டம் இயற்றும்வரை போராட்டத்தைத் தொடர்ந்த  மக்களை அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறை கடுமையாகத் தாக்கியதுடன், கைதும் செய்து நடவடிக்கை எடுத்தனர். சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியபோது, சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்வரும், இப்போது துணை முதல்வராக இருப்பவருமான ஓ.பன்னீர்செல்வம், 'ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள்மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்துசெய்வோம்' என அறிவித்தார். ஆனால், அதன்பின்பு  ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மதுரை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பி விசாரித்த போலீஸார், மொத்தம் 134 வழக்குகளைப் பதிவுசெய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க போராட்டம் நடத்தியவர்கள், தற்போது நீதிமன்றங்களுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீது வழக்கு போடமாட்டோம் என சட்டசபையில் கூறியவர், தற்போது ஜல்லிக்கட்டு நாயகன் என போற்றப்படுகிறார. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி, உரிமைக்காகப் போராடியவர்களைப் பாராட்டி, அரசு சிறப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள்மீது வழக்குப்போட்டு நீதிமன்றத்துக்கு அலைய வைத்துக்கொண்டிருக்கிறது. 

முகிலன்

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த, மதுரை மாவட்ட நிர்வாகம் தயாராகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடியவர்கள் மீதான  அனைத்து வழக்குகளயும்  ரத்துசெய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தோம். ஆனால், கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லும்முன், எங்களை எந்தக் காரணமும் சொல்லாமல் கைதுசெய்து தல்லாகுளம் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கேயும், எங்களிடம் எந்தக் காரணமும் சொல்லவில்லை.  கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கிற  ஜனநாயக உரிமையை காவல்துறை பறிக்கிறது. பிறகு எங்களை சில காகிதங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பச் சொன்னார்கள். 'எங்கள்மீது என்ன வழக்கு, எதற்காக காவல் நிலையத்தில் வைத்தீர்கள் என்று சொன்னால்தான் வெளியே செல்வோம்' என்று கூறிய பிறகு, நீண்ட நேரம் கழித்து, 'சிவகங்கையில் ஆளுநரிடம் ஏழு தமிழர்களின் விடுதலைக்காக மனு கொடுக்கச் செல்கிறீர்கள்' என்ற ரகசியத் தகவல் கிடைத்ததால்  கைதுசெய்தோம்' என்று எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தது மட்டும்தான் உண்மை. சரி, அவர்கள் சொல்வதுபோல் இருந்தாலும் கலெக்டர், ஆளுநரிடம் மனு கொடுக்கச் செல்வது சட்டவிரோதச் செயலா? பாதிக்கப்பட்ட மக்கள் உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மனு கொடுக்கக் கூடாதா? காவல்துறை நினைத்தால்தான் மக்கள் மனு கொடுக்க முடியுமா? இனிமேல் ஒரு வாரம் கழித்துதான், எங்களின் கோரிக்கையை கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடியும்'' என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலைக்காக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட ஆளுநரிடம் வலியுறுத்த, மதுரையிலிருந்து சில அமைப்பினரை ஒன்றுதிரட்டி, அனுமதி இல்லாமல் சிவகங்கை செல்லவிருப்பதாகக் கிடைத்த தகவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 151 சிஆர்பிசி  பிரிவில் ஏழு பேரையும் கைதுசெய்ததாக, தல்லாகுளம் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் போட்டு, பின்னர் விடுவித்துள்ளனர்.

இதுபற்றி மதுரை கலெக்டர் நடராஜனிடம் கேட்டோம், ''இதுபற்றி என் கவனத்துக்கு எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தால், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்