தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு! - சீறிப்பாய்ந்த காளைகள்; 13 வீரர்கள் காயம் | Pudukkottai jallikkattu

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (14/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (14/01/2019)

தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு! - சீறிப்பாய்ந்த காளைகள்; 13 வீரர்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 13 பேர் காயமடைந்தனர்.

சீறிப்பாய்ந்த காளை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில், ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.  ஜல்லிக்கட்டுத் தடை காரணமாக கடந்த சில ஆண்டுகள் நடத்தப்படாத நிலையில், இப்போது  தடை விலக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாக்குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்துவந்த நிலையில், போட்டிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, விழாக்குழுவினரின் பல கட்டக் கோரிக்கைகளுக்குப் பிறகு, ஜனவரி 14-ம் தேதி (இன்று) தச்சன்குறிச்சியில் காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்த விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்தனர். இதில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்துவரும் காளைகளைப் பிடிக்க ஏராளமான வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு காளைகளை அடக்கி, தங்களது வீரத்தை வெளிக்காட்டிவருகின்றனர். சில காளைகள், வீரர்களுக்கு போக்குக் காட்டி, களத்தில் தனது வீரத்தைக்காட்டி, பிடிக்க முடியாத காளையாக வீர நடைபோட்டுச் செல்கிறது.

ஜல்லிக்கட்டி போட்டியில் காளையை அடக்கும் வீரர்கள்

மாடுகள் முட்டியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டை காண்பதற்காக, புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காளைகள் மற்றும் வீரர்கள், மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.