ஸ்வாதியை விசாரிக்க எதிர்க்கிறார்; வாதாடுவதைத் த‌டுக்கிறார்! - கோகுல்ராஜ் வக்கீலுக்குத் தடைபோடும் அரசு வக்கீல் | Gokulraj murder case issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (14/01/2019)

கடைசி தொடர்பு:18:45 (14/01/2019)

ஸ்வாதியை விசாரிக்க எதிர்க்கிறார்; வாதாடுவதைத் த‌டுக்கிறார்! - கோகுல்ராஜ் வக்கீலுக்குத் தடைபோடும் அரசு வக்கீல்

கோகுல்ராஜ் பெற்றோர்- உறவினர்கள்

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு, நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக கருணாநிதி ஆஜராகி வாதிட்டுவந்தார். அவருடைய வாதத்தில் அதிருப்தி அடைந்த கோகுல்ராஜ் தரப்பினர், அரசு சிறப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமிக்க வேண்டுமென  உயர் நீதிமன்றம் சென்றார்கள்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக  ப.பா.மோகனை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, ப.பா.மோகன் 10.1.2019-ம் தேதி இவ்வழக்கில் ஆஜரானார். ஆனால், அவர் வாதிட முடியாமல் தொடர்ந்து கருணாநிதியே வாதிட்டுவருகிறார். இது, கோகுல்ராஜ் தரப்பில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ப.பா.மோகன்
இதுபற்றி கோகுல்ராஜின் நண்பரும் வழக்கறிஞருமான சந்தியூர் பார்த்திபன், ''எஸ்.சி., எஸ்.டி சட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக யார் இருக்க வேண்டும் என  பாதிக்கப்பட்டவர்கள் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வரும்போதே, அரசு தரப்பு வழக்கறிஞராக ப.பா. மோகனை நியமிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.

வழக்கறிஞர் கருணாநிதிஆனால், எங்களுடைய மனுவை ஏற்றுக்கொள்ளாமல், கோவையைச் சேர்ந்த செல்வராஜை நியமித்தார்கள். அவர், கோவையில் இருந்து வர இயலாது என்று கூறியதை அடுத்து, கருணாநிதியை நியமித்தார்கள். கருணாநிதி, இவ்வழக்கின் தொடக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டவில்லை. இந்த வழக்கை நடத்தும் சிபிசிஐடி போலீஸாரிடமும், சாட்சிகளிடமும்  வழக்கு சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை. பிறழ் சாட்சியாக மாறியவர்களிடமும் சரியாக குறுக்கு விசாரணை செய்வதில்லை.

வழக்கறிஞர் பார்த்திபன்உச்சக்கட்டமாக, இவ்வழக்கின் மிக முக்கிய சாட்சியான ஸ்வாதி, நீதிமன்றத்தில் ஆஜரானபோது வீடியோ பதிவு திரையிட்ட பிறகும், ''கோகுல்ராஜை தெரியாது. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுநாள் வரை போனதில்லை'' என உண்மைக்குப் புறம்பாகப் பேசியபோதும், கருணாநிதி கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்காமல் மௌனமாக இருந்தார்.

இதையடுத்து, நாங்கள் உயர் நீதிமன்றம் சென்ற பிறகு, இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமிக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகும், இன்னும் அரசு தரப்பில் கருணாநிதியே வாதிட்டுவருகிறார். ஸ்வாதி உட்பட சில முக்கிய சாட்சிகளை மீண்டும் விசாரிக்க ப.பா.மோகன் மனு போடுவதற்குகூட கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். உயர் நீதிமன்றமே நேரடியாக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமித்த பிறகும், அவர் வாதிட முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கை ப.பாமோகன் சாரே முழுமையாகக் கையாள வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க