மாமல்லபுரத்தில் முகாமிட்ட வெங்கைய நாயுடு! - கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அச்சாரமா? | Vice president venkaiah naidu stayed at Mamallapuram GRT resort

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (14/01/2019)

மாமல்லபுரத்தில் முகாமிட்ட வெங்கைய நாயுடு! - கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அச்சாரமா?

மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்துவருகிறார். இதனால் அந்த விடுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு

குடியரசு துணைத் தலைவர், குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக நேற்று மாலை ஹைதராபாத்திலிருந்து தனி விமானம்மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர். சென்னையில் 4 நாள்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கும் அவர், மாமல்லபுரத்திலிருக்கும் தனியார் விடுதியில் தற்போது தங்கி ஓய்வெடுத்துவருகிறார். இதனால் அந்த விடுதி, காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. அந்த விடுதியில்தான், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி அடிக்கடி தங்கி ஓய்வெடுப்பார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. அரசியல் பிரமுகர்கள் அவரை சந்திக்கிறார்களா என்பது ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில், நான்கு நாள்களுக்கு அவர் தங்குவதால், அரசியல் சார்ந்த  சந்திப்புகள் இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

வெங்கையா நாயுடு போகி கொண்டாட்டம்

‘வெங்கைய நாயுடுவின் மகள் வீடு, சென்னை நீலாங்கரையில் இருக்கிறது. அவர் அடிக்கடி மகள் வீட்டுக்கு வந்துசெல்வார். அதே போலத்தான் இந்த முறையும் வந்திருக்கிறார். மகளுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, 17-ம் தேதி டெல்லிக்குப் புறப்பட இருக்கிறார்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மாமல்லபுரத்தில் தங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க