பெண் மந்திரவாதிக்குக் கத்திக்குத்து..! - தப்பியோடிய ஆண் மந்திரவாதியைத் தேடும் காவல்துறை | Knife attack at tirupur for lady Sorcerer

வெளியிடப்பட்ட நேரம்: 01:40 (15/01/2019)

கடைசி தொடர்பு:01:40 (15/01/2019)

பெண் மந்திரவாதிக்குக் கத்திக்குத்து..! - தப்பியோடிய ஆண் மந்திரவாதியைத் தேடும் காவல்துறை

திருப்பூர் அருகே பெண் மந்திரவாதியைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடிய ஆண் மந்திரவாதியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

கத்திக்குத்து விழுந்த முருகேஸ்வரி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கரைப்புதூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார் முருகேஸ்வரி. 39 வயதான இவருக்குப் பூர்வீகம் கேரள மாநிலமாக இருந்தாலும், கடந்த சில வருடங்களாகவே தனது கணவர் செல்வராஜைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். கரைப்புதூர்ப் பகுதியில் சாமியாடிக் குறி சொல்வதும், பில்லி - சூனியம் உள்ளிட்ட மாந்திரீக வேலைகளையும் பார்த்து வந்தார் முருகேஸ்வரி. இவருக்குத் துணையாக விருதுநகர் மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த குமரகுரு என்ற ஆண் மந்திரவாதியும் உடனிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் இன்றைய தினம் வீட்டில் இருந்த முருகேஸ்வரிக்கும், அவரது ஆண் நண்பர் குமரகுருவுக்கும் இடையே இலேசான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றிவிட, அப்போது குமரகுரு தன்னுடைய கைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்திவிட்டுத் தப்பியோடியிருக்கிறார். வலியால் முருகேஸ்வரி அலறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர், கத்திக்குத்து தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் முருகேஸ்வரியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடிய குமரகுருவையும் மிகத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கத்திக்குத்து சம்பவம் பல்லடம் பகுதி மக்களிடையே பீதியை உண்டாக்கியிருக்கிறது.