691 காளைகள்... 594 வீரர்கள்... தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! | jallikkattu event in avaniyapuram

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (15/01/2019)

கடைசி தொடர்பு:08:55 (15/01/2019)

691 காளைகள்... 594 வீரர்கள்... தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. தை முதல் நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு பெரிய அளவில் சிறப்பாக நடைபெறும்.

ஜல்லிக்கட்டு

தை முதல் நாளான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கியுள்ளது. இதில் 691 காளைகளும், 594 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கும் போட்டிகள் மாலை 4 மணி வரை  நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் 1,095 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாடிவாசல், பார்வையாளர் கேலரி உள்ளிட்ட பகுதிகளில் 10 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 44 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

அவனியாபுரம்

ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவக் குழு மற்றும் 15 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவும், 12 அவசரக்கால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ரத்த வங்கி வசதியுடன் கூடிய நடமாடும் மருத்துவமனை வாகனமும் தயார் நிலையில் உள்ளது. பார்வையாளர்கள் அமரும் கேலரியில் 8 அடி உயரத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை ஆம்பூலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். முதன் முறையாக நீதிமன்றம் நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு போட்டியை நடத்துகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தச் சமூகத்திற்கோ அல்லது காளைக்கோ முதல் மரியாதை உள்ளிட்டவை வழங்கப்படக்கூடாது என இந்த குழு தெரிவித்துள்ளது. 

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு நிகழ்வில் கட்சி மற்றும் சமூகம் தொடர்பான கொடி மற்றும் தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. நகரில் பொதுமக்கள் போட்டிகளைக் கண்டுகளிக்க ஆங்காங்கே எல்.சி.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.