இரண்டாண்டுளாக கள்ள நோட்டு அச்சடிப்பு - திருவள்ளூர் அருகே ராணுவ வீரரின் மகன் கைது! | army man son arrested by police near Thiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (15/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (15/01/2019)

இரண்டாண்டுளாக கள்ள நோட்டு அச்சடிப்பு - திருவள்ளூர் அருகே ராணுவ வீரரின் மகன் கைது!

இரண்டாண்டுகளாக கள்ள நோட்டு அடித்து வந்த ராணு வீரர் ஒருவரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெங்கடேசன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் குட்டை மணி. இவர் மும்பையில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் வெங்கடேசன்,  தனது அப்பா மும்பையில் ராணுவத்தில் பணியாற்றும் போது அங்கு அவருடன் தங்கியிருந்தார். அங்கிருந்தபோது அவருக்கு சில திருட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் சில கள்ளநோட்டு பிரமுகர்களுடன் வெங்கடேசனுக்கு  தொடர்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து வெங்கடேசன்  அவர்களுடன் சேர்ந்து கள்ளநோட்டு அடிக்கும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புனே கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். அவர்களை விசாரித்த போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தான் எங்களுக்கு பணத்தை அடித்து தருவதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வந்த பூனே கிரைம் பிராஞ்ச் போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்.

கோயில்

கள்ளநோட்டு அடிக்கும் இயந்திரம் மற்றும் கள்ள நோட்டுகள் எங்கே இருக்கிறது என்று வெங்கடேசனிடம்  விசாரித்தபோது `பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் மிஷின் மூலம் கள்ள நோட்டு அடிக்கும் பணியை செய்ததாக' தெரிவித்தார்.  இங்கு அடிக்கும் கள்ள நோட்டை அட்டை பெட்டிகளில் அடைத்து வைத்து  லாரிகள் மூலம் மும்பைக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரது அறையில் பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டு கட்டுகளாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 500 ரூபாய் 2000 ரூபாய் இருநூறு ரூபாய் நூறு ரூபாய் என விதவிதமான கள்ளநோட்டுகள் லட்சக்கணக்கில் பிடிபட்டது.  

காவல்நிலையம்

அவர் அறையில் இருந்த ஜெராக்ஸ் மெஷின் கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய புனே  போலீசார், அவரை  கைது செய்து புனே அழைத்துச் சென்றனர். ரூபாய் நோட்டில் வரும் காந்தி படம் மற்றும்  நான்கு பக்க சிங்கம் பதித்த முத்திரை ரூபாய் நோட்டில் டைகளை பக்காவாக அடிப்பதில் கை தேர்ந்தவராம் வெங்கடேசன். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பகுதியில் கள்ளநோட்டு அழிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 இவருக்கு பொன்னேரி ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பகுதிகளிலுள்ள உளவுப் பிரிவு மற்றும் தனிப் பிரிவு போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக புனே போலீசார் தெரிவித்தனர். வெங்கடேசன் கைது செய்யப்பட்டது போலீசார் பத்திரிகையாளருக்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர்.