புதுக்கோட்டை அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா - ஆயிரக்கணக்கனோர் பங்கேற்பு! | Pongal fastival held in Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (15/01/2019)

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா - ஆயிரக்கணக்கனோர் பங்கேற்பு!

புதுக்கோட்டை அருகே மெய்வழிச்சாலை கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சாதி, மத, பேதம் இல்லாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழாவாகக் கொண்டாடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலை கிராமம் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் இங்குப் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாகக் கிராம மக்களால் ஒன்று சேர்ந்து  கொண்டாடப்படுகிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், விழாவில் கலந்து கொள்ளத் தவறுவது இல்லை. இந்த ஆண்டு மெய்வழிச்சாலையில் 118வது பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் இந்த ஆண்டு பொன்னரங்க தேவாலயத்தில் விழா துவங்கப்பட்டது. தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாகத் தீப்பந்தம் எடுத்து வரப்பட்டு அங்கு உள்ள கொடிமரத்தை 3முறை சுற்றி வந்த பிறகு தீப்பந்தத்தை மேலே கட்டினர். 

நீண்ட வரிசையில் பொங்கல் பானை வைத்து அடுப்பை மூட்டிப் பொங்கலோ, பொங்கல் என்று கூறி உற்சாகத்துடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். பொங்கல் வைத்து முடிந்ததும், வரிசையாக ஒவ்வொரு பானையில் இருந்தும், ஒரு கரண்டி பொங்கலை எடுக்கும் சபைக்கரசர், அனைத்தையும் ஒன்று சேர்த்து அதை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார். 

ஒன்று கலந்த இந்தப் பொங்கலைப் போல, நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்' என்பதை உணர்த்தவே, இந்தப் பிரசாதம் காலம், காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என 69 சாதியைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.