`பொய் புகார் நிரூபிக்கப்படாவிட்டால் சிறை உறுதி!' - ஸ்டாலினை மிரட்டும் கே.பி.முனுசாமி | K.P.Munusamy slams Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (15/01/2019)

`பொய் புகார் நிரூபிக்கப்படாவிட்டால் சிறை உறுதி!' - ஸ்டாலினை மிரட்டும் கே.பி.முனுசாமி

ஒருவர் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை கூறினால், அது பொய்யாக இருக்கும்பட்சத்தில் புகார் கூறியவருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு என்பதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்' என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கேபி முனுசாமி

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும்,  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திய லிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,  மற்றும் ஜே சிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து,  ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர்கள், கொடநாடு வழக்கு தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ``அரசுக்கும், முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தி.மு.க செயல்பட்டு வருகிறது.

இதன்காரணமாகத்தான் நேற்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படுள்ளது. அவர்களுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். யாரோ அரசியல் ஆதாயத்துக்காக சொன்ன கருத்துகளை எடுத்துக்கொண்டு வந்த ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. ஸ்டாலின் தோற்றுப்போவார். அவமானப்படுவார். ஒருவர் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை கூறினால், அது பொய்யாக இருக்கும்பட்சத்தில் புகார் கூறியவருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்பதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துக்கிறேன்' என்றார். சயன், மனோஜை நீதிபதி விடுவித்தது குறித்து பேசிய அவர், `காவல்துறை தானாக முன்வந்து எடுக்கும் நடவடிக்கைகள் மீது நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.