இலங்கைக்குச் செல்ல முயன்ற இரண்டு அகதிகள் -மடக்கிப் பிடித்த கடலோரக் காவல்படை! | Refugees arrested for attempted to go to SriLanka

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:26 (16/01/2019)

இலங்கைக்குச் செல்ல முயன்ற இரண்டு அகதிகள் -மடக்கிப் பிடித்த கடலோரக் காவல்படை!

இலங்கைக்குச் செல்ல முயன்ற இலங்கை தமிழ் அகதிகள் இருவரை இந்தியக் கடலோரக் காவல்படை மடக்கிப் பிடித்தது. அவர்களிடம் இருந்த வெளிநாட்டு கரன்சி மற்றும் ஜி.பி.எஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

கடலோரக் காவல் படை மடக்கி பிடித்த அகதிகள்


இந்தியாவிலிருந்து போதைப் பொருள்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவதும், அங்கிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்தி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இவற்றைத் தடுக்க மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் கடல் பகுதியில் மர்மப் படகு ஒன்று செல்வதாக மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் ரோந்துப் படகில் விரைந்து சென்று அந்தப் படகினை மடக்கினர். பாம்பனிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் பிடிபட்ட அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்த இருவர் இருந்துள்ளனர். இதையடுத்து படகுடன் அவர்களை கடலோரக் காவல்படை தளத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இலங்கை தப்ப முயன்ற அகதிகள்

அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது பெயர் அன்புகுமரன், சிவராஜன் எனவும், அவர்கள் மதுரையில் உள்ள ஆனைமலை அகதி முகாமில் அகதிகளாக தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தியப் பணம் ரூ.1,09,000 மற்றும் அமெரிக்கா, ஹாங்காங் நாட்டு டாலர் கரன்சிகள், 6 மொபைல் போன்கள், ஜி.பி.எஸ் கருவிகள் 2 ஆகியன கைப்பற்றப்பட்டன. இதையடுத்து பிடிபட்ட இலங்கை அகதிகளிடம் இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.