`இதைப் பாக்கியமாக நினைக்கிறேன்!' - சேலத்தில் உருகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy speaks about Jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/01/2019)

கடைசி தொடர்பு:13:10 (16/01/2019)

`இதைப் பாக்கியமாக நினைக்கிறேன்!' - சேலத்தில் உருகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``இறைவனிடம் கேட்டவற்றையெல்லாம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தலைவர்கள் மக்களுக்கு வாரி வாரி வழங்கி இருக்கிறார்கள்'' என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் இருக்கிறது அண்ணாபூங்கா. இதில் 2100 சதுர அடியில் 80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் மற்றும் அவர்களின் திருவுருவச் சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாநகர ஆணையாளர் சதீஷ் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

மணிமண்டபம் திறந்து வைத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் உழைப்பால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதாரம், கல்வி, மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. மக்களையே குடும்பமாக நினைத்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்கள். அவர்களின் சிலையைத் திறப்பதற்கு இறைவன் கொடுத்த பாக்கியமாக நினைக்கிறேன். இருபெரும் ஒப்பற்ற தலைவர்களின் உழைப்பால் இன்று நாம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறோம். இவர்கள் தமிழகத்தில் அண்ணா வழியில் நம்மை வழிநடத்தியவர்கள். இறைவனை நான் பார்த்ததில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவில் பார்த்திருக்கிறோம். இறைவனிடம் கேட்டவற்றையெல்லாம் இந்த இருபெரும் தலைவர்கள் மக்களுக்கு வாரி வாரி வழங்கி இருக்கிறார்கள்.

ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மரியாதை

உலகத்தில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களில் இடையில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுவார்கள். இவர்கள் நம்மை வாழ வைத்த தெய்வங்கள். அவர்களுக்குப் புகழ் சேர்க்கும் விதமாக இன்று சேலத்தின் மையப்பகுதியில் இருபெரும் தலைவர்களுக்கு திருவுருவச் சிலைகள் திறக்கப்பட்டிருக்கிறன.

ஜெயலலிதா ஆட்சியில் நாட்டு மக்களுக்காக உழைத்த சிவந்தி ஆதித்தனார், ராமசாமி படையாச்சியார், நல்லப்பசாமி, பூலித்தேவன் எனப் பலரின் உருவச் சிலைகளை திறந்திருக்கிறோம். இங்கு எம்.ஜி.ஆர் பிறந்த தினவிழாவை முதல் முறையாகக் கொண்டாடப்படும். சேலம் பழைய பேருந்து டூ ஓமலூர் சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுகிறோம்'' என்று தெரிவித்தார்.