``அரசியல்வாதிகள் திருடினாலும் திருடர்கள் என்றே அழைக்கவேண்டும்"- கமல்ஹாசன் | Kamalhaasan's coimbatore visit

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (16/01/2019)

கடைசி தொடர்பு:13:30 (16/01/2019)

``அரசியல்வாதிகள் திருடினாலும் திருடர்கள் என்றே அழைக்கவேண்டும்"- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். இன்று மேற்கு மண்டலத் தலைமை அலுவலகத்தைக் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இதையடுத்து, ஆனைமலை, புரவிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களோடு மக்களாக, பாரம்பர்ய முறையில் அவர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார். முன்னதாக, பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருடன் கமல்ஹாசன் உரையாடினார். அப்போது, கேள்வி- பதில் பிரிவில், கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதற்குக் கமலும் தனது ஸ்டைலில் பதிலளித்து அசர வைத்தார்.

கமல்ஹாசன்

நீங்கள் தாமதமாக அரசியலுக்கு வந்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறதே?

எனக்கும் அந்த வருத்தம் இருக்கிறது. தற்போது அரசியல் அடிகளைத் தெளிவாக எடுத்து வைத்து வருகிறோம்.

அரசியல் தலைமைகள் புகழப்படுவது, பேசப்படுவது தவிர்த்து உங்கள் தொண்டர்கள் மக்கள் குறைகளை தலைவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவே தலையாய பணியாகத் தொண்டர்களுக்கு இருக்க வேண்டும். தலைவர்களும் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்?
 
எங்களது அமைப்பு நிச்சயமாக இந்த விஷயத்தை முன்னெடுக்கும்.

அரசியல் தலைவர்கள் தனக்கு அடுத்து நல்ல தலைமைகளை உருவாக்குவதும் இல்லை, உருவாக விடுவதுமில்லை. அந்தக் குறையை உங்கள் அமைப்பு போக்க முடியுமா?

எனக்கு அடுத்து டாக்டர் மகேந்திரன் தலைவராக இருப்பார்.

கமல்ஹாசன்

``மகேசன் பணியை விட மக்கள் பணியே எமக்கு முக்கியம். தமிழக நலனை முதன்மையாகவும், தேசிய அரசியலில் கண்டிப்பாகப் பங்கெடுப்போம். சாதாரண மனிதன் திருடினால் திருடன், அதிகாரிகள் திருடினால் கையாடல், அரசியல்வாதிகள் திருடினால் ஊழல் என்று பேசப்படாமல் `திருடர்கள்' என்றே அனைவரையும் அழைக்க வேண்டும்" என்று கமல்ஹாசன் பேசினார்.

இதுகுறித்து அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், ``அரசியல் தலைமைகள் மக்களை நோக்கி, `கேள்வி கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்' என்று புறப்பட்டு வருவது நல்ல ஆரோக்கியமான செயல். நாம் பள்ளிக்கூடத்திலிருந்து பதில் சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம். பெரும்பாலான மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் மக்கள் நலன் முன்னேறும். அனைத்து அரசியல் தலைவர்களையும் நாம் சந்தித்து வந்துள்ளோம். எங்களது கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசனின் அரசியல் `தில்'லை வரவேற்கிறோம்" என்றார்.