திருப்பூரில் திருவள்ளுவருக்குக் கோயில்!- வழிபாடு நடத்திச் செல்லும் மக்கள் | Thiruvalluvar temple inauguration at tirupur town

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (16/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (16/01/2019)

திருப்பூரில் திருவள்ளுவருக்குக் கோயில்!- வழிபாடு நடத்திச் செல்லும் மக்கள்

திருப்பூரில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி அசத்தியிருக்கிறார்கள் மக்கள் மாமன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

திருவள்ளுவர் சிலை

திருப்பூர் மங்கலம் சாலையில் கருவம்பாளையம் என்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் இணைந்து திருப்பூர் மக்கள் மாமன்றம் என்ற பெயரில் ஒரு பொதுநல அமைப்பை நடத்தி வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பொதுநல சேவைகளைச் செய்துவரும் இந்த அமைப்புக்கு இந்த வருடம் வெள்ளிவிழா ஆண்டு. எனவே தங்களது அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நினைத்த மக்கள் மாமன்ற அமைப்பினர் இந்தமுறை திருவள்ளுவருக்குப் புதிதாகக் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். 

அதில் 4  அடி உயரத்தில் கையில் ஓலைச் சுவடி மற்றும் எழுத்தாணியுடன் திருவள்ளுவரின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 2.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தத் திருவள்ளுவர் கோயிலுடன் சேர்ந்து ஒரு பொது நூலகமும் அமைந்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டுப் புதிதாகத் திறக்கப்பட்ட இந்தத் திருவள்ளுவர் கோயிலுக்குச் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வந்து மாலை அணிவித்து வள்ளுவரை வணங்கிச் செல்கிறார்கள்.

திருவள்ளுவர் சிலையை வழிபடும் மக்கள்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் மாமன்றத்தின் செயல் தலைவர் சத்ருகன், ``திருவள்ளுவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது எங்களின் நீண்டகால கனவு. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தோம். இந்தநிலையில்தான் எங்களது அமைப்பின் வெள்ளிவிழாவை முன்னிட்டு கோயில் கட்டுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. எந்தவொரு மதம் சார்ந்தும் வள்ளுவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்பதால், இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அவரது கோயிலிலும் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சடங்கு முறைகளில் வழிபாடுகள் கிடையாது. உலகப் பொதுமறை எழுதியவருக்குப் பொதுவான வழிபாடுகள் மட்டுமே நடத்துவோம். இங்கு வரும் பொதுமக்கள் வள்ளுவரைப் பற்றிய தகவல்களை படிப்பதற்காக ஒரு நூலகமும் அமைத்திருக்கிறோம்'' என்றார்.