படகுகளை மீட்க இலங்கை செல்கிறது தமிழக மீனவர், அதிகாரிகள் குழு! | TN fishermen with official to travel SriLanka tomorrow to recover boats

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (16/01/2019)

கடைசி தொடர்பு:14:10 (16/01/2019)

படகுகளை மீட்க இலங்கை செல்கிறது தமிழக மீனவர், அதிகாரிகள் குழு!

இலங்கை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்காக மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நாளை இலங்கை செல்கிறது.

படகுகளை மீட்க இலங்கை செல்ல தயாரக உள்ள மீனவர் குழு

தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை எல்லைதாண்டி வந்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 157 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தது. ஆனால்,  விடுதலை செய்யப்பட்ட 157 விசைப்படகுளில் 47 படகுகள் மட்டுமே மீட்கப்படும் நிலையிலும், பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளது. இது மீனவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீட்கப்படும் நிலையில் உள்ள 47 படகுகளில் காரைநகர் மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் உள்ள 22 விசைப் படகுகள் மட்டும்   ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமானது. இதில் முதல் கட்டமாக காரைநகரில் உள்ள 9 விசைப் படகுகளை மீட்க 9 விசைப் படகுகளில் 71 மீனவர்கள் அடங்கிய படகு மீட்புக் குழு பல்வேறு துறை அதிகாரிகள் பரிசோதனைக்குப் பின் இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கை காரை நகர் புறப்படவிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து நாகபட்டினம் சென்று அங்கிருந்து இலங்கைக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து 10 மணி நேரம் நாகை பயணித்து பின் அங்கிருந்து இலங்கை சென்றால் பயண நேரம் அதிகமாக இருப்பதுடன்,  டீசலும் அதிகம் செலவாகும். எனவே நேரடியாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை செல்ல அனுமதிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் நாளைக் காலை ராமேஸ்வரத்திலிருந்து 7 மணிக்கு இலங்கை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து நாளைக் படகு மீட்புக் குழு இலங்கை செல்கிறது. நாளை செல்லும் மீனவக் குழு ஒரு சில தினங்களில் படகுகளை மீட்டு ராமேஸ்வரம் திரும்புவார்கள். மேலும் இரண்டாவது கட்டமாக வரும் 25-ம் தேதி  கிராஞ்சி துறைமுகத்திற்குச் சென்று எஞ்சிய 13 படகுகளை மீட்க உள்ளனர்.