`மாடுபிடித்த டி.ஆர்.ஓ, வங்கி ஊழியர்கள்!' - கிராம மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம் | Officials celebrated pongal festival with karur village peoples

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (16/01/2019)

கடைசி தொடர்பு:15:10 (16/01/2019)

`மாடுபிடித்த டி.ஆர்.ஓ, வங்கி ஊழியர்கள்!' - கிராம மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

மாடு பிடித்த டி.ஆர்.ஓ மற்றும் வங்கி அலுவலர்கள்

கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட வாங்கல் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் அலுவலர்கள் கிராமத்து மக்களுடன் இணைந்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பாரம்பர்ய முறைப்படி கொண்டாடி அசத்தினர். இவ்விழாவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வாங்கல் பொங்கல் விழா

கிராமத்து மக்களுடன் வாங்கல் கிராம பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள், மண்டல மேலாளர்கள், பொது மேலாளர்கள் இணைந்து பாரம்பர்ய முறைப்படி விளையாட்டுப் போட்டிகளை நடத்தி மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள். குறிப்பாக, சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கயிறு இழுத்தல், பெரியவர்களுக்குச் சிலம்பாட்டம், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளும் மிதிவண்டி பந்தயமும் நடைபெற்றது. சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட மிதிவண்டி பந்தயத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கிவைத்து, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், தமிழர் திருநாளை பறைசாற்றுகின்ற வகையில் நாட்டு மாடுகளுக்கும் மரியாதை செலுத்தி, பாரம்பர்ய முறைப்படி பொங்கல் வைத்து கிராம மக்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

வாங்கல் பொங்கல் விழா..

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் பேசியபோது, ``எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்பு பாசம் கிராமத்து மக்களிடம்தான் கொட்டிக் கிடக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். நானும் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன்தான் என்பதை இந்த நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கிராமத்து மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் தொன்மையையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் கருதப்படுகிறது.

வாங்கல் பொங்கல் விழா...

நாளெல்லாம் உழைத்து அனைவருக்கும் சோறு போடுகின்ற உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் பெருவிழாவாக, உழவுக்குப் பயன்படுகின்ற காளைகளை போற்றுகின்ற திருவிழாவாகப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் வாங்கல் கிராமத்து மக்களுடன் இணைந்து கலந்துகொண்ட இந்தப் பொங்கல் திருவிழா என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். அதேபோல், ஸ்டேட் பேங்க் அலுவலர்கள் மட்டுமல்லாது, உயர் அலுவலர்களும் மக்களோடு சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடியது மகிழ்வான விஷயமாகும். இதுவரை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு லோன் கொடுத்த பேங்க் ஊழியர்கள், இப்போது இங்கே மாடுகளைப் பிடித்து, பொங்கல் விழா கொண்டாடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது" என்றார்.