‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்!’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு | Officials Ignored Minister veeramani's name in flex created ruckus in vellore ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (16/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (16/01/2019)

‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்!’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு

அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் இடையே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி அதிகாரிகள், அமைச்சர் வீரமணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால், அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் - விளம்பரம்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதி. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், வாணியம்பாடி தொகுதி. இவர்களின் அதிகார மோதலுக்கு முக்கியக் காரணம், இவ்விரு தொகுதிகளும் அருகருகே இருப்பதுதான். வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணி இருப்பதால், ‘பெண் அமைச்சர் தன்னிடம் கேட்டுக்கொண்டே எதையும் செய்ய வேண்டுமென்று’ அவர் நினைக்கிறார். ‘‘குறுநில மன்னரைப்போல் வீரமணியின் செயல்பாடு உள்ளது. அதனால், நிலோபர் கபில் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்படுகிறார்’’ என்கின்றனர் நிலோபரின் ஆதரவாளர்கள்.

அமைச்சர் வீரமணி

இவ்விரு அமைச்சர்களின் மோதல் பற்றி, கடந்த 6-ம் தேதி வெளிவந்த ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘அதிகார மோதலில் அமைச்சர்கள்... சின்னாபின்னமான வேலூர் அ.தி.மு.க’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, அனைவரும் அறிந்ததே! இந்த நிலையில், அமைச்சர் வீரமணிக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகாரிகள் சிலர் துணிந்து எடுத்துள்ளது, வேலூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளின் நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அமைச்சர் நிலோஃபர் கபில்

குறிப்பாக, அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடி நகராட்சி விளம்பரத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான வீரமணியின் பெயர், புகைப்படம் இல்லை. திட்டப் பணிகளைக் குறிப்பிட்டு, நிலோபரின் பெயரையும் புகைப்படத்தையும் பெரியதாக விளம்பரத்தில் பிரசுரித்துள்ளனர். இந்த நடைமுறை, எப்போதுமில்லாமல் தற்போது புதியதாக இருப்பதால், அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம் உட்பட மற்ற நகராட்சிகளின் விளம்பரத்தில் அமைச்சர் வீரமணியுடன் சேர்த்து நிலோபரின் பெயர், புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில், ‘‘வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மட்டும், வீரமணியைப் புறக்கணித்தது ஏன்? பெண் அமைச்சர் நிலோபருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? அதிகாரிகளின் இந்தச் செய்கையால், கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது’’ என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வினர். இதுசம்பந்தமாக வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கோபுவிடம் கேட்டதற்கு, ‘விளம்பரம் பிரசுரிக்கும் முன்பு அமைச்சர் வீரமணியின் பெயர், புகைப்படத்தைச் சேர்க்குமாறு, என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லவில்லை’ என்றார்.