42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு! - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா? | Will thirukkadaiyur bullock cart race take place amidst ban

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (16/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (16/01/2019)

42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு! - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா?

நாகை மாவட்டம், திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று நடைபெறும் ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) நடத்த இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடத்தப்படும் எல்கைப் பந்தயம் தடையை மீறி இந்த ஆண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருக்கடையூரில் உத்ராபதியார் நினைவாக மாட்டு வண்டி, குதிரை வண்டிப் போட்டிகள் 42 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதையே பெருமையாகக் கருதும் போட்டியாளர்கள், போட்டியில் பங்கேற்பதற்காகவே ஆண்டு முழுவதும் மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் ஊட்டசத்து உணவும் பயிற்சியும் கொடுத்து வளர்க்கிறார்கள். 

அதில் வெற்றிபெறும் மாடுகளுக்கு விலை அதிகம். போட்டி முடிந்தவுடனே மாடுகள் வியாபாரமும் நடப்பதுண்டு. இந்தப் போட்டிகள் திருக்கடையூரிலிருந்து தரங்கம்பாடி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் 6 கி.மீ தூரத்தில்தான் நடைபெறும். 

இந்த ஆண்டு எல்கைப் பந்தயம் நடத்துவது குறித்து திருக்கடையூரில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எல்கைப் பந்தயம் , இம்முறை அரசு விழாவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற வேண்டும், புதிய குதிரைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், நுழைவுக் கட்டணத்தைக் குறைத்து பரிசுத் தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்க கோரி காழியப்பநல்லூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி, தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில், "எல்கைப் பந்தயத்தை பார்வையிட ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். மேலும் சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் எல்கைப் பந்தயம் நடத்த அரசு அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் 17-ம் தேதி (நாளை)  திருக்கடையூரில் எல்கைப் பந்தயம் நடைபெற்றால் சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எந்த தரப்பினரும் பந்தயத்தை நடத்தக்கூடாது என்றும் அரசு தரப்பில் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை எனவும் கோட்டாட்சியர் தேன்மொழி கூறியுள்ளார்.

மேலும், அனுமதியின்றி ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

தடையை மீறி பந்தயம் நடக்குமா என்று போட்டியாளர்களும் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க