பரதம், கரகாட்டம், பட்டிமன்றம்! - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர் | Virudhunagar Collector celebrates pongal with tribal people

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (16/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (16/01/2019)

பரதம், கரகாட்டம், பட்டிமன்றம்! - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்

ராஜபாளையம் அருகே குடியிருக்கும் மலைவாழ் மக்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழா கொண்டாடினார்.

பொங்கல்

தமிழர் திருநாளான தைத்திருநாள் தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டச் சுற்றுலாத்துறை சார்பில் ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஐயனார்கோயில் மலைவாழ் மக்களுடன் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் பங்கேற்று, தானும் மக்களோடு மக்களாக அமர்ந்து விழாவைச் சிறப்பித்தார். இதில் பரதம், கரகம், சாட்டைக்குச்சியாட்டம் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கம்மாபட்டி இளைஞர்களின் தேவராட்டம், கரகம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. `வீடா... காடா..?’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பட்டிமன்றமும் பண்பான மனிதன் உருவாகப் பெரிதும் காரணமாக இருப்பது `தனிமனித முயற்சியா... சமூகக் கோட்பாடுகளா?’ என்ற தலைப்பில் அரசு அலுவலர்களுக்கான பட்டிமன்றமும் நடைபெற்றது.

பொங்கல்

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பனங்கிழங்கு, கடலை, கொலுக்கட்டை, பனியாரம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் பொது அறிவுக்கான கேள்விகளைக் கேட்டு பதில் கூறியவர்களுக்கு பரிசு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக 30 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கும் தலா ரூ.10,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ்கள் வழங்கினார்.

பொங்கல்

ராஜபாளையம் அருகே 10,500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் கருப்பையா என்ற 82 வயது முதியவருக்கும் 110 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயி விக்னேஷ்வரன் என்பவருக்கும் அவர்களின் பணியைப் பாராட்டியும் ஊக்குவிக்கும் வகையிலும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

பொங்கல்

அப்போது அந்த முதியவர் பேசும்போது, ``எனக்கு 82 வயது ஆகிறது. இந்த மரங்கள் அனைத்துக்கும் இன்னும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறேன். இவை மரங்கள் அல்ல. என் பிள்ளைகள். மாவட்ட ஆட்சியர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் சேரக் கூடாது’’ என்றார்.