ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி! - சிறுமி உள்பட இருவர் கொலை | Lady and his daughter murder near avadi

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (16/01/2019)

ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி! - சிறுமி உள்பட இருவர் கொலை

ஆவடி அருகே தன் விருப்பத்துக்கு உடன்படாத பெண்ணைக் குடுகுடுப்புக்காரர் ஒருவர் கொலைசெய்துள்ளார். உடனிருந்த அவரின் 3 வயது மகளையும் கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

ஆவடி பஸ் நிலையம் அருகே நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டி, இவர் தன் குடும்பத்துடன் இந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலை காரணமாக பாண்டிச்சேரி சென்று உள்ளார். வீட்டில் மனைவி ரோஜா மற்றும் பெண் குழந்தை சுஜாதா (வயது 3) தனியாக இருந்துள்ளனர். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் ரோஜா வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் ரோஜா வீட்டை வந்து பார்த்தபோது தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆவடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர். அதில் வீரா (எ) வீரக்குமார் என்பவரை மோப்ப நாய் கவ்விப் பிடித்து காட்டி கொடுத்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த, இரவு நேரங்களில் குடுகுடுப்பை ஜோசியம் பார்க்கும் வீரா (எ) வீரக்குமார் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். வீரா அடிக்கடி குடித்துவிட்டு ரோஜா வீட்டுக்குப் போய் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரோஜாவின் கணவர் அருன் பாண்டி வீட்டில் இல்லாததைப் பார்த்த வீரா குடித்துவிட்டு இரவு 12 மணியளவில் ரோஜா வீட்டுக்குச் சென்று கதவை திறந்து ரோஜாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது அதற்கு உடன் படாத ரோஜாவின் தலை மீது கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்.  

அப்போது சத்தம் போட்ட பெண் குழந்தை சுஜாதா தலை மீதும் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு வீட்டின் வெளியே இருக்கும் குழாயில் கை கழுவிவிட்டு பொறுமையாக வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆவடி போலீஸாரிடம் ரோஜா உறவினர்கள் அளித்த புகாரின் பெயரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயும் மகளும் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.