`20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ' - திருவள்ளுவர் தினத்தில் அசத்தும் திருக்குறள் தாத்தா..! | old man sells tea one rupee for thiruvalluvar day

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:06:00 (17/01/2019)

`20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ' - திருவள்ளுவர் தினத்தில் அசத்தும் திருக்குறள் தாத்தா..!

தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணியில் திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு முதியவர் ஒருவர் தனது டீ கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார். மேலும் திருக்குறள் பெருமையை எடுத்து கூறுவதோடு சுமார்  20 ஆண்டுகளாக இது போன்று செய்து வருவதால் அப்பகுதியில் அவரை திருக்குறள் தாத்தா என்றே அழைக்கின்றனர்.

திருக்குறள்

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார் இவருக்கு வயது 70. இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். இவர் திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். இதனால் பல வருடங்களாக தினமும் அவர் கடையில் ஒரு கரும்பலகை வைத்து  சில திருக்குறளை எழுதி அதற்கான பொருளையும் எழுதி வைப்பார். என் கடைக்கு டீ குடிக்க வருபவர்கள் வாழ்கைக்கான தத்துவத்தையும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பார். இரண்டு அடி திருக்குறள் போல் மக்கள் எல்லாவற்றிலும் அளவாக இருந்தால் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது என்பார். மேலும் திருக்குறள் மீது கொண்ட பற்றினாலும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நுாலாக அறிவித்திட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு இதற்காக சுமார் 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு டீ வழங்கி வருகிறார்.

திருக்குறள் தாத்தா

இதே போல் நேற்று கொண்டாடப்பட்ட திருவள்ளூர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார். இவர் கடையில் ஐயாயிரத்திற்கும் பேருக்கு மேல் ஒரு ரூபாய்க்கு டீ குடித்தனர். மேலும் இவரது டீ கடையிலேயே ஏராளமான நுால்கள் கொண்ட நூலகமும் வைத்துள்ளார். அத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய வகுப்புக்களை எடுத்து அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.

இது குறித்து தங்கவேலனார் கூறியதாவது, ``திருக்குறள் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகிறோம். திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் வகையிலும், மொழி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க போராட வேண்டும்,

திருக்குறள் தாத்தா

எத்தனையோ நபர்களின் பிறந்த நாட்களை சிறப்பாக கொண்டாடுகிறோம் நாம். ஆனால் "திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கு இல்லை. திருவள்ளுவரின் பிறந்த தினத்தை யாரும் கொண்டாடுவதும் இல்லை. இதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காவே ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறேன். நான் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை 1 லட்சம் பேருக்கு ஒரு ரூபாயுக்கு டீ கொடுத்துள்ளேன். மேலும் அவர்களுக்கு திருக்குறள் பற்றியும் எடுத்து கூறி வருகிறேன். கடந்த ஆண்டு பிளாஸ்டிக் கப்பில் தான் டீ கொடுத்தேன். இந்தாண்டு பிளாஸ்டிக் தடையால் சில்வர் டம்ப்ளரில் கொடுத்தேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது" என்றார். பேராவூரணியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ``திருக்குறள் தாத்தா கடைக்கு வந்தால் சுவை மிகுந்த டீ குடிப்பதோடு அவரது வசீகர குரலில் திருக்குறளையும் கேட்டு செல்வோம். அய்யாவால் எங்க ஊரில் பலர் திருக்குறளையும் அதன் பொருளையும் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க