மாமியார் மருமகள் மோதல் - சபரிமலை சென்ற பெண் மீது வழக்குப் பதிவு! | case filed against kanaga durga who went to sabarimala

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (17/01/2019)

மாமியார் மருமகள் மோதல் - சபரிமலை சென்ற பெண் மீது வழக்குப் பதிவு!

சபரிமலை சென்ற கோழிக்கோட்டைச் சேர்ந்த கனக துர்க்கா வீட்டிற்குச் சென்றபோது தாக்கப்பட்டதாக அவரது அத்தை சுமதி மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுமதியை தாக்கியதாகக் கனக துர்க்கா மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமதி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனக துர்க்கா, கண்ணூரைச் சேர்ந்த பிந்து ஆகியோர் ஜனவரி 2-ம் தேதி சபரிமலை சன்னிதானத்திற்குச் சென்றனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததால் இரண்டு வாரங்கள் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு பெருந்தல்மண்ணயில் உள்ள கணவர் வீட்டிற்குக் கனக துர்க்கா நேற்று காலை சென்றார். அப்போது அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி அப்போது வீட்டில் இல்லை. கனக துர்க்காவின் மாமியார் சுமதி வீட்டில் இருந்திருக்கிறார்.

சபரிமலை சென்ற கனக துர்க்கா

கனக துர்க்கா சபரிமலை சென்றது பிடிக்காததால் அவரது அத்தை சுமதி அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. கனக துர்க்காவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்று கனக துர்க்கா தாக்கியதில் அவரது அத்தை சுமதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கனகதுர்க்காவின் அத்தை சுமதி மீது நேற்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் கனக துர்க்கா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.