இலங்கை சிறை அதிகாரிகளால் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரம்! | Sri lankan prison authorities attacked inmates brutally, video leaks online

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (17/01/2019)

இலங்கை சிறை அதிகாரிகளால் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரம்!

 இலங்கை சிறை அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த  கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் அடித்து சித்ரவதைக்கு உட்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சிறை அங்குணகொளபெலஸ்ஸ

இலங்கை சிறையில் உள்ள கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவதில்லை என, பல ஆண்டுக்காலமாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது இலங்கைத் தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது இந்திய மீனவர்களாக இருந்தாலும் சரி. விடுதலைப் புலிகளைக் காரணமாகக் காட்டியே  இத்தகைய கொடுமைகளை நிகழ்த்தி வந்தனர் இலங்கை சிறை அதிகாரிகள். 

கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் 1983-ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 2011-ம் ஆண்டும் மஹிந்த ராஜபக்‌ஷேவின்  ஆட்சிக்காலத்திலும்   20-க்கும்  மேற்பட்ட சிறைக்கைதிகள் சித்ரவதைக்கு ஆளாகியினர். மேலும், ரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.

இலங்கை சிறை கைதிகள் போராட்டம்

இந்தநிலையில், கடந்த வருடம் நவம்பர் 22-ம் தேதி இலங்கை அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக   வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்குச் சிறைச்சாலை அதிகாரிகளால் நேர்ந்த சித்ரவதையை வெளிப்படுத்தும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அங்குணகொளபெலஸ்ஸ சிறையில் உள்ள கைதிகளைப் பார்வையிட வரும் அவர்களது உறவினர்களைச் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடாக நடத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை சிறை கைதிகள் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த சிறை அதிகாரிகள், ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறைச்சாலையின் கண்காணிப்புக் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்திய கைதிகளை சுற்றி வளைத்த சிறைக்காவலர்கள் அங்கிருந்து அவர்களைக் கீழே இறக்கிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்களை மண்டியிட்டபடி கைகளைத் தூக்கியபடி சிறை அறைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போதும் தங்கள் ஆத்திரம் அடையாத காவலர்கள் சிலர், அவர்களை லத்திகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். 

இந்தக் கொடூர சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குணகொளபெலஸ்ஸ சிறையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசாங்கம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் புகார் செய்துள்ளனர்.