மூதாட்டியைக் கட்டிவைத்து நகை கொள்ளை! - சிசிடிவியால் சிக்கிய ரவுடிகள்! #Cuddalore | Two accused got arrested in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (17/01/2019)

கடைசி தொடர்பு:14:59 (17/01/2019)

மூதாட்டியைக் கட்டிவைத்து நகை கொள்ளை! - சிசிடிவியால் சிக்கிய ரவுடிகள்! #Cuddalore

கடலூர் மாவட்டம் வடலூரில் பல்வேறு வழக்குளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வடலூர் அன்னை சத்யா வீதியைச் சேர்ந்த மணி மகன் அருள்பாண்டி(27). ஆபத்தானபுரம் பகுதியைச் சேர்ந்த மணிக்கண்ணன் மகன் ஐயப்பன் (28). இவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்துக் கொள்ளை அடிக்கவும், பஸ் கண்ணாடிகளை உடைக்கவும் சதித் திட்டம் தீட்டியபோது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரும்புப் பைப்புகள் இரண்டு கைப்பற்றப்பட்டன. இதில் அருள்பாண்டி மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 18 வழக்குகளும், ஐயப்பன் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 9 வழக்குகளும் உள்ளன.

ரவுடிகள்

கடலூர் பச்சையாங்குப்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (67). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு வாடகைக்குக் கேட்பது போன்று 3 பேர் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினைப் பறித்துச் சென்றனர்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது மூதாட்டி வீட்டில் நுழைந்து செயினை அறுத்துச் சென்றவர்கள் அடையாளம் தெரிந்தது. அவர்கள் பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதிஷ்குமார், வடலூர் ஆபத்தாணபுரம் சந்தோஷ்குமார், திருவள்ளுர் மாவட்டம் பாப்பன்சத்திரம் ரஞ்சித் என அடையாளம் தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் கடந்த 15-ம் தேதி ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் அதிகாலை பஸ்சில் இருந்து இறங்கிய பொறியாளர் அகிலன் குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அகிலன் மனைவி சிவகாமசுந்தரி கொண்டு வந்த 10 சவரன் நகை வைத்திருந்த பையைக் காணவில்லை. இது குறித்து ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமநத்தம் பஸ் ஸ்டாப்பில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது அவர்கள் ஆட்டோவில் வந்தபோது தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சங்கர் போலீஸார் கைப்பை குறித்து ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருவதை அறிந்து ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் கைப்பையை ஒப்படைத்தார்.  இந்த இரண்டு வழக்குகளும் சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு, உடன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு மாவட்ட எஸ்.பி சரவணன் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டினார்.