வகுப்பு அறையில் உட்கார்ந்தனர்... பழைய நினைவை பகிர்ந்தனர்... நெகிழ்ந்த 96-ம் ஆண்டு பழைய மாணவர்கள் | old students of 1991 batch met and shared their old days joys

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (17/01/2019)

கடைசி தொடர்பு:14:55 (17/01/2019)

வகுப்பு அறையில் உட்கார்ந்தனர்... பழைய நினைவை பகிர்ந்தனர்... நெகிழ்ந்த 96-ம் ஆண்டு பழைய மாணவர்கள்

பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் கடந்த 1996-ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள் மறுசந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள். 

பழைய மாணவர்கள் சந்திப்பு

தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், தூய சவேரியார் பள்ளி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பள்ளியில் படித்த பலர் உயர்ந்த பொறுப்புகளை வகித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 1991-ம் ஆண்டு 6-ம் வகுப்பில் சேர்ந்து 1996-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்து வெளியே வந்த பழைய நண்பர்கள் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். 

ஆனால், பழைய மாணவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. அதனால் இந்த விழாவுக்கு `96-மறுசந்திப்பு’ எனப் பெயரிட்டார்கள். அதன் பின்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாகத் தங்களோடு பயின்ற நண்பர்களைத் தேடும் முயற்சி நடந்தது. அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு இந்த மறுசந்திப்பு குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன.

அத்துடன், இந்தச் சந்திப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ‘கவுன்டவுன்’ தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளாகக் குறைந்து, பின்னர் ஒவ்வொரு மணித்துளியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சந்திப்பு குறித்த பதிவுகள் செய்யப்பட்டன. அதனால் பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தவர்கள் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள். 

பள்ளி வளாகத்தில் சந்திப்பு

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் 83 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். தாங்கள் படித்த வகுப்பறையில் அதே இருக்கையில் அமர்ந்து நெகிழ்வுடன் பழைய நினைவுகளை அசைவிட்டனர். நெருக்கமான பால்யகால நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தபோது கட்டியணைத்து அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள். பழைய நண்பர்களின் பால்ய கால நினைவுகள் மற்றும் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டது. 

பழைய நண்பர்கள் சந்தித்துக்கொண்டதுடன் பழைய ஆசிரியர்கள் குறித்தும் அவர்களின் கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் பற்றியும் சிலாகித்துப் பேசினார்கள். பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்ட பழைய மாணவர்கள், தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களையும் அழைத்துக் கௌரவித்ததுடன் அவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் பங்கேற்க இயலாத நண்பர்கள் மற்றும் தொடர்புகொள்ள முடியாதவர்களையும் தேடிக் கண்டுபிடித்து அடுத்த ஆண்டு சந்திப்பில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்து பள்ளிக்காலப் பசுமையான நினைவுகளுடன் கலைந்து சென்றனர்.