`கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பதற்றம் அடையணும்?’ - சந்தேகம் எழுப்பும் தினகரன் | TTV Dinakaran slams edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (17/01/2019)

கடைசி தொடர்பு:17:54 (17/01/2019)

`கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பதற்றம் அடையணும்?’ - சந்தேகம் எழுப்பும் தினகரன்

``கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகப்படும்படியாக உள்ளது'' என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் தினகரன் திருவாரூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று இரவே கும்பகோணம் வந்த தினகரன், தனியார் ஹோட்டலில் தங்கினார். அதன்படி இன்று காலை எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகத் திருவாரூர் புறப்பட்டவர், முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதற்குத் தமிழக முதலமைச்சர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களே குற்றம் சுமத்திய நிலையில் அவர்களை அவசர அவசரமாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் காவலில் வைக்க மறுத்துவிட்டது.

முதல்வர் தவறு செய்யவில்லை. அவருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றால் ஏன் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார், `இறந்துபோன டிரைவர் கனகராஜிடமா இதற்கு ஸ்டேட்மென்ட் வாங்க முடியும்?’ என்கிறார். இந்த விவகாரத்தில் 5 பேர் இறந்திருக்கின்றனர். கனகராஜ் முதலமைச்சரின் ஊரைச் சேர்ந்தவர் என அவர் அண்ணன் சொல்கிறார். முதல்வர் ஏன் இதில் பதற்றப்பட வேண்டும். குற்றவாளிகளை அவசரமாகக் கைது செய்தது காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

ஜெயகுமார்- எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரத்தில் முந்திக்கொண்டு பேட்டி தருவது எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது சந்தேகப்படும்படியாக உள்ளது. இவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விசாரிக்க மாட்டார்கள். காலம் வரும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்வோம். அப்போது உண்மை தெரியவரும். இதில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கட்சி கூட்டணி அமைப்பது தொடர்பாகச் சில மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடுவதோடு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைவிட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஓர் உண்மையைக் கூறி அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தொடர்பில் இருப்பதை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். கூட்டுறவு சங்கத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துகொண்டன. மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கேட்கின்ற கான்ட்ராக்ட் பணிகள் கொடுக்கப்படுகின்றன" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க