அரியமான் கடற்கரையில் களைகட்டிய கிராமிய விழா - பொதுமக்கள் உற்சாகம்! | Folk art shows in ramanathapuram.

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (17/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (17/01/2019)

அரியமான் கடற்கரையில் களைகட்டிய கிராமிய விழா - பொதுமக்கள் உற்சாகம்!

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிராமியக் கலை


ராமநாதபுரம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்டபம் அருகே உள்ள அரியமான் கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பொங்கல் விழா மற்றும் மாநில அளவிலான  கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான இன்று, சுற்றுலா கடற்கரை பகுதியான அரியமான் கடற்கரையில், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுக்கும் விதமாக, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்றவற்றை கிராமியக் கலைஞர்கள் நிகழ்த்தினர்
 

ஆட்டம்

இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ''தூய்மையான நிலையை  உருவாக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள், தெருக்கள், வணிக நிறுவனங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் பகுதிகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து, குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். அப்போதுதான், நம் மாவட்டத்தை மாநில அளவில் தூய்மையான மாவட்டமாக மாற்ற முடியும். அதற்கு, உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்'' என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியரின் துணைவி டாக்டர் ஹசன்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமாலினி,  மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.