புளியமரத்தில் கார் மோதி விபத்து..! - திருப்பூர் அருகே 3 வயதுக் குழந்தை உட்பட 3 பேர் பரிதாப மரணம் | 3 year child death by accident near tiruppur

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (18/01/2019)

கடைசி தொடர்பு:02:15 (18/01/2019)

புளியமரத்தில் கார் மோதி விபத்து..! - திருப்பூர் அருகே 3 வயதுக் குழந்தை உட்பட 3 பேர் பரிதாப மரணம்

3 வயது சிறுவன் செல்வமித்ரன்

திருப்பூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று வயதுக் குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. 62 வயதான இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜோதிமணி. இத்தம்பதிக்கு சுகுணா மற்றும் அருணா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்தநிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அருணாவின் 3 வயது மகன் செல்வமித்ரனை அழைத்துக்கொண்டு முத்துச்சாமி, ஜோதிமணி மற்றும் அவரது தந்தை நாச்சிமுத்து ஆகியோர் உடுமலைப்பேட்டையில் உள்ள தங்களது மகள் சுகுணாவின் வீட்டுக்கு காரில் சென்றுள்ளனர்.

விபத்து

பின்னர் பொங்கல் கொண்டாட்டம் முடிந்து மீண்டும் தாராபுரத்துக்குச் சென்றுகொண்டு இருந்தநிலையில், எதிர்பாராதவிதமாக முத்துச்சாமியின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நாச்சிமுத்து, ஜோதிமணி மற்றும் சிறுவன் செல்வமித்ரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முத்துச்சாமி மட்டும் பலத்த காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தன் கண் முன்னே தந்தையும், மனைவியும், பேரனும் பலியான சம்பவம் முத்துசாமி உட்படப் பொதுமக்கள் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.