ஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள்? - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ் | two professors arrested for fake phd certificates

வெளியிடப்பட்ட நேரம்: 01:29 (18/01/2019)

கடைசி தொடர்பு:01:59 (18/01/2019)

ஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள்? - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்

போலி டாக்டர், போலி வழக்கறிஞர், போலி போலீஸ் அதிகாரி வரிசையில், புதிதாகச் சேர்ந்திருப்பவர்கள், போலி பேராசிரியர்கள். கடந்த ஆண்டில், கோவையில் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து, அறநிலையத் துறையில் சிலர் பணியில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதேப்போன்று, வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியம், ஆவின் போன்ற அரசுத்துறைகளிலும் போலிச்சான்றுகள் கொடுத்து பணியில் சேர்ந்ததாகப் புகார்கள் எழுந்தன.

ஊட்டி அரசு கல்லூரி

போலி கல்விச்சான்று கொடுத்து, எழும்பூர் தாய்சேய் நலவிடுதியில், செவிலியர்களாகப் பணியாற்றிய இருவர் சிக்கினர். தர்மபுரியில் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆசிரியர்கள் இருவர், கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியில் ஒன்றாம் வகுப்புப் படித்து விட்டு, போலிச் சான்றிதழ் கொடுத்து தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவரும் மாட்டிக்கொண்டார். கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றதாக போலிச்சான்றிதழ் காண்பித்து, கல்லூரியில் பயிற்சி அளித்த ஒருவரால் கோவை கல்லூரி மாணவி ஒருவர், பரிதாபமாகப் பலியான சம்பவமும் நடந்தது. இதுவரை, போலி கல்விச்சான்றிதழ் கொடுத்ததாகப் பலரும் சிக்கிக் கொண்டு வரும் நிலையில், உயர் கல்வித்துறையிலேயே பலரும் போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல், இப்போது வெளியாகியுள்ளது.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன் ஆகிய இருவரும், முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெற்றதாக போலிச்சான்றிதழ் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது நீலகிரி மாவட்ட காவல்துறையில் ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்துள்ளார். இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 3 பேர், வடமாநில பல்கலைக்கழகங்களில் போலியான சான்றிதழ்கள் பெற்று பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் இருவர் பிடிபட்டுள்ளனர். 

இதே கல்லூரியில் வேதியியல் துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ஒருவரே, பணத்துக்காக இந்த போலி சான்றிதழ்களைத் தயார் செய்து கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊட்டி அரசு கலை கல்லூரியில் பணியாற்றி, பணி மாறுதல் பெற்று தற்போது கரூரில் பணியாற்றும் உதவி பேராசிரியர் மீதும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் தரப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவருடைய சான்றிதழ்களையும் சரி பார்த்தால், போலிச்சான்றிதழ் கொடுத்துள்ள பலரும் சிக்க வாய்ப்புண்டு. இதற்கென்று சிறப்புக்குழுவை அரசு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

உரியத் தகுதியின்றி, போலிச் சான்றிதழ்களால் பணியில் சேர்வோரால், கஷ்டப்பட்டுப் படித்த பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, எதிர்காலத்தில் சான்றிதழ் சரி பார்ப்புக்கென புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியதும், இதற்கென தனிப்பிரிவை உருவாக்கி ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் அதிமுக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.