கஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம்! - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள் | pudukkottai jallikattu held in grand manner

வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (18/01/2019)

கடைசி தொடர்பு:03:45 (18/01/2019)

கஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம்! - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்

புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு வந்த பார்வையாளர்களுக்கு அந்த பகுதி மாமரத்தடி நண்பர்கள் குழு மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த வன்னியன்விடுதி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். 59வது ஆண்டாக இந்தாண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு, இந்த ஊர் இளைஞர்கள் சிறிய அன்பளிப்பு அளிப்பதும் வழக்கம். இந்த நிலையில், இந்த வருடம் கஜா புயலால், மாவட்டம் முழுவதுமே லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இந்த வருடம்  விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இந்த ஊர் மாமரத்தடி நண்பர்கள் குழுவினர் இணைந்து மா, பலா, கொய்யா, நெல்லிக் கன்று என 5 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி வந்தனர்.

ஜல்லிக்கட்டு முடிந்ததும் அவற்றை, ஜல்லிக்கட்டு பார்க்க வந்த பொதுமக்களுக்கு வழங்கி அவர்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பாமல், மரக்கன்றுகளுடன் அனுப்பி வைத்தனர். ஒருவர் மரக்கன்றுகளை வழங்க, மற்றொருவர் மரத்தை நட்டு, பாதுகாப்பது குறித்தும் விளக்கிக் கொண்டு இருந்தார்.

மரக்கன்று

மாமரத்தடி நண்பர்கள் குழுவினரிடம் பேசினோம்,  'மாவட்டமே கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எங்க கிராமமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆசையாக நட்டுவளர்த்த மரங்கள், வருஷம் முழுவதும் வருமானம் தந்த மரங்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்தது. இந்த நிலையில் தான் மரங்களை இழந்த மக்களுக்கு மீண்டும் பழைய நிலை உருவாக்க  நம்மால் முடிந்த சிறிய உதவியைச் செய்ய வேண்டும் என நண்பர்கள் ஒன்றுகூடித் திட்டமிட்டோம். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மரக்கன்றுகள் வாங்கிக்கொடுக்கும்  திட்டத்தை தேர்ந்தெடுத்தோம். வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து வந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடினோம். மா, பலா, கொய்யா, நெல்லி என 50ஆயிரம் கன்றுகள் வரையிலும் நர்சரியில் வாங்கி வந்தோம்.

மரக்கன்று

அவற்றை ஜல்லிக்கட்டு பார்க்க வந்த மக்களிடம் கொண்டு சேர்த்தோம். எங்கள் ஊர் ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர்கள் வருவார்கள். அவர்களுக்குக் கொடுப்பதால் பரவலாக அனைத்து ஊர்களுக்குக் கிடைத்துவிடும். எனவே தான் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மரக்கன்றுகளை வழங்கினோம். மரக்கன்றுகளை வழங்கியதோடு, அவற்றைப் பராமரிப்பதன் அவசியம் குறித்து விளக்கி உள்ளோம். மரக்கன்றுகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட்டு மீண்டும் மாவட்டம் பழைய  நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே எங்களுக்கு ஆசை. பார்வையாளர்களுக்குக் கொடுத்து மீதம் இருக்கும் மரக்கன்றுகளைப் பள்ளிகளில் நட்டுப் பராமரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றனர்.