சேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை? - மத்திய அரசு திட்டம் | Chennai-Trichy new expressway

வெளியிடப்பட்ட நேரம்: 06:36 (18/01/2019)

கடைசி தொடர்பு:06:36 (18/01/2019)

சேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை? - மத்திய அரசு திட்டம்

சென்னை - சேலம் பசுமை வழி சாலை அமைக்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திருச்சி- சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கத் திட்டம் தீட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை திருச்சி இடையே புதிய சாலை

பார்தமாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6,741 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழி  சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் - சென்னை இடையே பசுமை வழி சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், சென்னை - திருச்சி இடையே பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆய்வுப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து ஜனவரி 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து திருச்சி வரை 310 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைப்பது குறித்து விரைவில் ஆய்வுப் பணி தொடங்கப்படவுள்ளது.. மதுரை - மேலுார் - -பிள்ளையார்பட்டி - காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்க ஏற்கனவே திட்டம் உள்ளது. இதில், பிள்ளையார்பட்டியில் இருந்து தூத்துக்குடி வரையும் புதிய பசுமை வழி சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை 160 கி.மீ தொலைவில் அமைகிறது. ஏற்கெனவே, தஞ்சையில் இருந்து பிள்ளையார்பட்டி வரை 82 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு  வழி சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. 

சாலை அமைக்கும் பணி

தற்போது, சென்னை - திருச்சியைத் தேசிய நெடுஞ்சாலை - 45 இணைக்கிறது. இது குறித்து பேசிய  மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பசுமை வழி சாலை அமைவதால் பயண நேரம் குறையும். விபத்துகள் ஏற்படுவதும் குறையும். மக்கள் சாலை வேண்டுமென்கிறார்கள், ஆனால் நிலத்தைக் கையகப்படுத்தும் போது பிரச்னை செய்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டே பசுமை வழி சாலைகள் அமைக்கப்படுகின்றன'' என்று கூறுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க