சர்ச் நிர்வாகம் சம்பந்தமாகக் கேரளாவில் இரு சபையினர் மோதல் - திருச்சூர் பிஷப் காயம்! | Tension erupts in kerala thirussur over church row

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:11:00 (18/01/2019)

சர்ச் நிர்வாகம் சம்பந்தமாகக் கேரளாவில் இரு சபையினர் மோதல் - திருச்சூர் பிஷப் காயம்!

திருச்சூர் செயின்ட் மேரீஸ் சர்ச்சை நிர்வகிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் ஆர்த்தோடோக்ஸ் சபை திருச்சூர் பிஷப் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஷப் யோகனான்

கேரள மாநிலத்தில் 1064 சர்ச்சுகளை நிர்வகிப்பது சம்பந்தமாக யாக்கோபு சபையினர் மற்றும் ஆர்த்தோடோக்ஸ் சபையினரிடையே பிரச்னை இருந்துவருகிறது. இந்த சர்ச்சுகள் சம்பந்தமாக மொத்தமாகவும், தனித்தனியாகவும் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன்படி வழக்குகளில் கடந்த 2017-ம் ஆண்டுமுதல் தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஆர்த்தோடோக்ஸ் சபையினர்தான் சர்ச்சுகளை நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

போராட்டத்தில்

அதன் ஒரு பகுதியாக எர்ணாகுளம் மாவட்டம் பிறவத்தில் உள்ள சர்ச்சை நிர்வகிப்பதற்காக ஆர்த்தோடோக்ஸ் சபையினர் போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்றனர். அப்போது சர்ச்சுக்கு மேல் பகுதியில் இருந்துகொண்டு பலர் தற்கொலை மிரட்டல் விட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதுபோன்று கோர்ட் தீர்ப்பு வழங்கிய திருச்சூர் மாவட்டம் மண்ணாமங்கலம் செயின்ட் மேரீஸ் சர்ச்சை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்த்தோடோக்ஸ் சபையினர் நேற்று காலையிலிருந்து சர்ச் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது யாக்கோபாய சபையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் சர்ச்சுக்குள் அமர்ந்து இருந்தனர்.

போராட்டம்

நேற்று இரவு சுமார் 11.15 மணியளவில் ஆர்த்தோடோக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள் சர்ச்சுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த மோதலில் ஆர்த்தோடோக்ஸ் திருச்சூர் மறைமாவட்ட ஆயர் யோகன்னன் மார் மிலித்தியோஸ் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இதுசம்பந்தமாக இன்றும் பிரச்னை ஏற்படலாம் என்பதால் சர்ச் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.