பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாட்ஜ்!- சிக்கிக்கொண்ட உரிமையாளர் | Arakonam lodge owner arrested for running sex rocket

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (18/01/2019)

பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாட்ஜ்!- சிக்கிக்கொண்ட உரிமையாளர்

அரக்கோணம் லாட்ஜில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். பாலியல் தொழில் நடத்த அனுமதித்த லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

 லாட்ஜ் - கைது

வேலூர் மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீவாரி காயத்ரி என்கிற லாட்ஜ் உள்ளது. இங்கு, விபசாரம் நடப்பதாக அரக்கோணம் டவுன் போலீஸாருக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸார், விரைந்து சென்று லாட்ஜில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருத்தணி மற்றும் திருவலாங்காடுப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்குட்பட்ட இரண்டு இளம்பெண்களை போலீஸார் மீட்டனர். 

இதுதொடர்பாக, லாட்ஜ் உரிமையாளரான, அரக்கோணம் கும்மினிப்பேட்டையைச் சேர்ந்த நரசிம்மலு (46), மேலாளர் சந்திரபாபு (60) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் குறிப்பாகப் பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் உள்ள லாட்ஜ்களில் பாலியல் தொழில் அதிகம் நடைபெறுகிறது. பல இடங்களில் மாமூல் கொடுப்பதால், போலீஸார் கண்டும் காணாததைப் போல் இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

சமீபத்தில், வேலூர் சி.எம்.சி மருத்துவமனை அருகில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த நேபாளச் சிறுமியை, பெண் ஒருவர் நடுரோட்டில் அடித்து உதைத்தார். பொதுமக்கள், அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சிறுமி மீட்கப்பட்டார். பாலியல் தொழில், வேலூர் மாவட்டத்தில் பெருகி வருவதைத் தடுக்கக் காவல்துறை உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.