`உங்களக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'!- மறுத்த விதவைப் பெண்; விபரீதத்தில் ஈடுபட்ட வாலிபர் | Kanniyakumari youth attacks woman with acid and commits suicide

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/01/2019)

கடைசி தொடர்பு:12:20 (18/01/2019)

`உங்களக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'!- மறுத்த விதவைப் பெண்; விபரீதத்தில் ஈடுபட்ட வாலிபர்

குமரி மாவட்டத்தில் 35 வயதுள்ள விதவைப் பெண்ணிடம் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியிருக்கிறார் 28 வயது இளைஞர் ஒருவர். விதவைப் பெண் திருமணத்துக்கு மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

ஆசிட் வீசப்பட்ட விதைப்பெண் கிரிஜா

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரைச் சேர்ந்தவர் கிரிஜா (35).  இவரது கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்துவந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதையடுத்து கிரிஜா தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவந்தார். கிரிஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜாண்றோஸ் (28) அடிக்கடி உதவி செய்துவந்துள்ளார். இது இருவருக்கும் பழக்கமாக மாறியுள்ளது. ஜாண்றோஸ் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். இதற்கிடையில் கிரிஜாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஜாண்றோஸ் கூறியுள்ளார்.

ஆசிட் வீச்சு

திருமணத்துக்கு கிரிஜா மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கிரிஜா வீட்டுக்குச் சென்ற ஜாண்றோஸ் திருமணத்துக்கு வற்புறுத்தியுள்ளார். வழக்கம்போல கிரிஜா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாண்றோஸ் கையில் எடுத்துச் சென்ற ஆசிட்டை கிரிஜா முகத்தில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வலியால் அலறிய கிரிஜாவை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஜாண்றோசை அப்பகுதியினர் தேடிப்பார்த்தபோது அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளார். ஜாண்றோஸை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை ஜாண்றோஸ் எடுத்து வந்து கிரிஜா மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் கிரிஜாவின் பார்வை பறிபோனதாகவும் கூறப்படுகிறது. வயது வித்தியாசம் பாராமல் ஏற்பட்ட பழக்கத்தால் நடந்த இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.