வருவாய்த் துறை எதிர்ப்பு...! காவல்துறை ஒத்துழைப்பு...! திருக்கடையூரில் நடந்த ரேக்ளா ரேஸ் | thirukadaiyur rekla race 2019

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (18/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (18/01/2019)

வருவாய்த் துறை எதிர்ப்பு...! காவல்துறை ஒத்துழைப்பு...! திருக்கடையூரில் நடந்த ரேக்ளா ரேஸ்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில், காணும் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்), இந்த ஆண்டு அரசு அனுமதி கோரி கிடைக்கவில்லை என்பதால் பந்தயம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து, அரசு அனுமதி அளிக்காத திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் மூன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 277 போலீஸார் பாதுகாப்புடன் இன்றும் வழக்கம் போல் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கடையூரில் உத்திராபதியார் நினைவாக 40 ஆண்டுகளுக்கு மேல் காணும் பொங்கல் அன்று மாடு, குதிரைகளை கொண்டு ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு எல்கைப் பந்தயம் நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 

காழியப்பநல்லூர் கிராம மக்கள் ``சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் அதனால் ரேக்ளா ரேஸ் க்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று மாவட்ட ஆட்சியர்க்கு மனு அளித்ததால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி, ரேக்ளா ரேஸ் நடத்துவதற்காக கோரப்பட்ட அனுமதியை வழங்க மறுத்து விட்டார்.

இந்நிலையில், அரசு அனுமதி அளிக்காத திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் இன்று காலை 3 டி.எஸ்.பி. தலைமையில் 277 போலீஸார் பாதுகாப்புடன் தொடங்கியது.

காலை 8 மணிக்குச் சிறிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி என்.என்.சாவடி தொடக்கப்பள்ளி வரை 5 கி.மீ. நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி அனந்தமங்கலம் ஆர்ச் மற்றும் மகிமலையரு பாலம் வரை நடைபெற்றது.

குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் மதியம் 1.30 மணிக்கு திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்யில் தொடங்கி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வரை 10 கி.மீ. நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீடியோவைக் காண க்ளிக் செய்க...

 

 

கிழக்கு கடற்கரை சாலையில் திருக்கடையூரிலிருந்து 10 கி.மீ தொலைவுக்கு நடைபெறும் எல்கைப் பந்தயத்தைச் சாலையின் இருபுறம் நின்று ஏராளமான மக்கள் பார்வையிடுகின்றனர். பந்தயத்தில் பங்கெடுக்கும் வண்டிகள் சாலையில் ஓரம் நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் மீது மோதி விபத்து நடக்காமல் இருக்க எந்த வித தடுப்புகளும் அமைக்கவில்லை.

 

இனி வரும் ஆண்டுகளில், அரசு அனுமதி அளித்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பின் இம்மாதிரியான போட்டிகள் நடத்தப் பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க