`அவசரத்தில் இப்படிச் சென்றுவிட்டேன்; இனி இதுபோன்று நடக்காது!'- நீதிபதியிடம் உறுதியளித்த விஜயபாஸ்கர்  | Minister Vijayabhaskar filed afidavit in Madurai HC bench over Helmet case

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (18/01/2019)

கடைசி தொடர்பு:14:19 (18/01/2019)

`அவசரத்தில் இப்படிச் சென்றுவிட்டேன்; இனி இதுபோன்று நடக்காது!'- நீதிபதியிடம் உறுதியளித்த விஜயபாஸ்கர் 

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சென்ற விஜயபாஸ்கர்

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதில், 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புஉணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பேரணியில் சென்ற பலரும் ஹெல்மெட் அணியவில்லை.

அரசியல்வாதிகளோடு கை கோக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இதன் மூலம் மோட்டார் வாகனச் சட்டத்தையும், கட்டாய ஹெல்மெட் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அமைச்சர் மீறியுள்ளார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு கொண்ட அமர்வு முன்பு வந்தபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``வாகனப் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் சென்றது யாதார்த்தமாக நடைபெற்ற நிகழ்வு. இதைப் பொருட்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். இதையேற்க மறுத்த நீதிபதிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமைச்சருக்கும் பொருந்தும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறி ஜனவரி 18-ம் தேதிக்கு (இன்று) விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ``அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனி அதுபோன்று நடக்காது" என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.