துண்டுப் பிரசுரம் விநியோகித்த மாணவர் கைது! - விடுவிக்கக்கோரி 2-வது நாளாகப் போராட்டம் | Peoples protest to demand the release of student, who is arrested for issuing Pamphlet

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:15:40 (18/01/2019)

துண்டுப் பிரசுரம் விநியோகித்த மாணவர் கைது! - விடுவிக்கக்கோரி 2-வது நாளாகப் போராட்டம்

கலவரத்தைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட சந்தோஷை, விடுதலை செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாகப் பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவரை விடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களும், திறக்க வேண்டும் என ஒப்பந்தத் தொழிலாளர்களும், லாரி சங்கத்தினர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தனியார் கல்லூரி முன்பு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது எனவும் கல்லூரி மாணவர்களிடம் கலவரத்தைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக கடலூர் மாவட்டம், மூர்த்திக்குப்பத்தைச் சேர்ந்த நடேசன், கோவில்பட்டியைச் சேர்ந்த சந்தனக்குமார், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த கலீல்ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் விசாரணையில் இவர்கள் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

பண்டாரம்பட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

இந்த வழக்கில், மாணவர்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியதாக, பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தத் தகவல் தெரிந்தவுடனேயே சந்தோஷை விடுதலை செய்ய வலியுறுத்தி பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சந்தோஷுக்கு ஆலோசனை வழங்கி ஒருங்கிணைப்புச் செய்ததாகவும், நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது எனவும் மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவனை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல் ஜீனியஸ் என்பவரையும் தாளமுத்துநகர் போலீஸார் கைது செய்துள்ளனர். பண்டாரம்பட்டி கிராமத்தில் சந்தோஷை விடுதலை செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்புப் பணிகளுக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க