பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை | Madras hc's new order over 300 tonne Vishnu statue issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (18/01/2019)

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

தமிழகத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பெருமாள்

கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது கோதண்ட ராமசாமி திருக்கோயில். இங்கு 108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகங்கள் மற்றும் 22 கைகளைக் கொண்ட பெருமாளின் விசுவரூப சிலையை, ஒரே பாறையில் அமைக்க முடிவு செய்து மத்திய அரசின் மூலம் தமிழக அரசை அணுகினார் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் சதானந்தா. அதன்படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்த தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் இரு பாறைகளை அடையாளம் காட்டி அனுமதி வழங்கியது.

பெருமாள் சிலை

2014 அக்டோபர் மாதம் பாறைகள் வெட்டும் பணியைத் தொடங்கியது சதானந்தாவின் குழு. 64 அடி நீளம், 24 அடி அகலம், 380 டன் எடை கொண்ட ஒரு பாறையில் பெருமாளின் முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டது. பின்னர் அது 240 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூருக்குப் புறப்பட்டது. சிலை செல்வதற்கு இடையூறாக இருந்ததாக வெள்ளிபேடுப் பேட்டை என்ற ஊரில் உள்ள வீடுகளையும், கடைகளையும் இழப்பீடு தருவதாகச் சொல்லி இடித்துத் தள்ளினர் சிலைக் குழுவினர். ஆனால் சொன்னபடி இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவில்லை என்று புகார் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.

உயர் நீதிமன்றம்

அதேபோல திருவண்ணாமலையைக் கடக்கும்போது கிரிவலப் பாதையில் இருந்த மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது மரங்கள் வெட்டப்பட்டதற்குப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியைச் சென்றடைந்ததது அந்தச் சிலை. இதற்கிடையில், ``அந்தப் பாறைக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனால் அந்தப் பாறையை பெங்களூருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும் அதை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா” என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சிலை

நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் முன்பு இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது “உரிய அனுமதி பெறப்பட்டு, நிபந்தனைகளின்படிதான் அந்தப் பெருமாள் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்படுகிறதா” என்பது குறித்த அறிக்கையை நான்கு வாரத்துக்குள் அளிக்க வேண்டும் என்று கனிம வளத்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க