`நேர்முகத் தேர்வில் பாஸாகிவிட்டேன்!' - கால்களை இழந்த வாணியம்பாடி விஜய் உற்சாகம் | ''Because of Vikatan I've Started Walking Without pain'' says Vijay who lost his legs in a train accident

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (18/01/2019)

`நேர்முகத் தேர்வில் பாஸாகிவிட்டேன்!' - கால்களை இழந்த வாணியம்பாடி விஜய் உற்சாகம்

யில் விபத்தில் தன் கால்களை இழந்த  வாணியம்பாடி விஜயையும், கால்கள் போனால் என்ன; 'தாலி கட்ட கைகள் இருக்கிறதல்லவா' என்று மருத்துவமனைக்கே தேடிவந்து அவரைத் திருமணம் செய்துகொண்ட ஷில்பாவையும் மறந்திருக்க முடியாது. 

வாணியம்பாடி விஜய்

விஜய்க்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட புதிதில், ஆனந்த விகடனில் அவருடைய பேட்டி வந்திருந்தது.  அந்தப் பேட்டியில், ''இந்தக் கட்டைக் கால்கள் ரொம்பக் கனமா இருக்கிறதால நடக்கக் கஷ்டமா இருக்கு. லைட் வெயிட் கால்கள் வாங்கணும். எனக்கொரு வேலை தேடணும்.  குடும்பத்தைக் காப்பாத்த ரயிலில் டி- ஷர்ட் வித்துக்கிட்டிருக்கிற எங்கம்மாவை உட்கார வைச்சு சாப்பாடு போடணும்'' என்று உருக்கமாகப் பேசியிருந்தார். 

கிரிஜா தேஷ்பாண்டேஆனந்த விகடனில்  வெளியான விஜய்யின் பேட்டியைப் படித்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் கீதா என்பவர், விஜய்க்கு10 ஆயிரம் ரூபாய் உதவி செய்திருக்கிறார்.  நாகர்கோவிலில் பிறந்து மும்பையில் செட்டிலாகிவிட்டவரும், மும்பை ரோட்டரி கிளப் உறுப்பினருமான  கிரிஜா தேஷ்பாண்டே, சென்னையில் இருக்கிற ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட்டிடம் பேசி, விஜய்க்கு லைட் வெயிட் செயற்கைக் கால்களை வாங்கித் தந்திருக்கிறார். கீதா, கிரிஜா இருவருமே விகடன் வாசகிகள்.

ஆனந்த விகடனுக்கு நன்றி சொல்லிப் பேசிய விஜய், ''லைட் வெயிட் கால்கள் வைச்ச பிறகு  வலி, வேதனை இல்லாமல் நடக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆனா, மறுபடியும் புதுசா செயற்கைக் கால்கள் வைச்சதால், முதல் தடவை மாதிரியே காலெல்லாம் ரணமாயிடுச்சு. பட் நோ பிராப்ளம் மேம், பத்து நாளில் ரணமெல்லாம் ஆறி, அந்த இடம் மரத்துப் போயிடும். அப்புறம் நானும் எல்லோர் மாதிரியும் வாழ ஆரம்பிச்சிடுவேன்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிற விஜய், தனியார் நிறுவனமொன்றின் நேர்முகத் தேர்வில் தேர்வாகியிருக்கிறார். ''கூடிய விரைவில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிடும்; வேலைக்குப் போயிடுவேன். குடும்பப் பொறுப்பை அம்மா கையில் இருந்து நான் வாங்கிக்கொள்வேன்'' என்று பொறுப்புடன் பேசுகிறார் விஜய். 

ஆல் தி பெஸ்ட் விஜய்