`ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடணும்!' - 14 கி.மீ தூரம் சைக்கிள் பேரணி நடத்திய அனைத்துக் கட்சியினர் | hydrocarbon

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (18/01/2019)

`ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடணும்!' - 14 கி.மீ தூரம் சைக்கிள் பேரணி நடத்திய அனைத்துக் கட்சியினர்

தமிழகத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும், அதைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், திருவாரூர் மாவட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி

தமிழகத்தில், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் 2016-ம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமல்படுத்தப்பட்டது. அப்போது பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அந்தக் கிராம மக்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மத்திய அரசு, திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால், மீண்டும் நெடுவாசல் திருக்காரவாசல் பகுதிக்கு வந்துவிடுமோ என  அப்பகுதி மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். இந்தப் பகுதியைச் சுற்றிலும்  அதிக அளவில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ள இப்பகுதியில், இத்திட்டத்தை அனுமதிப்பதன்மூலம் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

சைக்கிள் பேரணி நடத்திய அனைத்துக் கட்சியினர்

மக்களின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக தி.மு.க-வினர் மற்றும் அனைத்து தோழமைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  பங்கேற்ற சைக்கிள் பேரணி, திருக்காரவாசலில் தொடங்கி 14 கிலோ மீட்டர் வரை சென்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர். முடிவில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.