காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை | Group Clash in Pongal Celebration one Killed

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (18/01/2019)

கடைசி தொடர்பு:21:10 (18/01/2019)

காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை

கடலூர் அருகே, காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்


கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (40). இவர், அ.தி.மு.க பிரமுகர். காணும் பொங்கலை முன்னிட்டு, அதே கிராமத்தில் தனது நண்பர்களுடன் நேற்றிரவு மது அருந்தியுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் சுபாஷ் (35) என்பவரும் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். தாமோதரனுக்கும் சுபாஷுக்கும், ஏற்கெனவே தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு மது அருந்தியபோது  இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பினரும் அரிவாள், தடி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர், இரு தரப்பினரும் ஊருக்குள் சென்று வீடுகள்மீது தாக்குதல் நடத்தியதுடன், சில வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், தாமோதரன் தரப்பைச் சேர்ந்த தங்கவேல் (37), முத்துராமன் (45), ஞானவேல் (21), சிறுமி சுபாஷினி (10) ஆகியோர் காயமடைந்தனர். இதேபோல, சுபாஷ் தரப்பில் மணிகண்டன், சேதுபதி ஆகியோரும் காயமடைந்தனர். வீடுகளுக்குத் தீ வைத்ததில் பணம் மற்றம் நகைகள் சேதமடைந்துள்ளது.

வீடுகள்

இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அமைதியை ஏற்படுத்தினார்கள். பின்னர், தாமோதரன் தரப்பைச் சேர்ந்த ஞானவேல் அளித்த புகாரின் பேரில் சுபாஷ், சுதாகர், பிரபாகரன் உட்பட16 பேர்மீது வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் உட்பட 3 பேரை கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தாமோதரன் தரப்பைச் சேர்ந்த  தங்கவேல் உயிழந்தார்.

தங்கவேல்

மேலும், சுபாஷ் தரப்பைச் சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.