நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம் | The fisherman's body was buried in a sinking boat

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (18/01/2019)

கடைசி தொடர்பு:21:50 (18/01/2019)

நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்

மீன்பிடிக்கச் சென்றபோது படகு மூழ்கியதால் உயிரிழந்த மீனவர் முனியசாமியின் உடல், அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

மீனவர்


ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற  கருப்பையா என்பவருக்குச் சொந்தமான படகு கடலில் மூழ்கியது. இந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்ற  4 மீனவர்களில், கடலில் தத்தளித்த 3 பேரை இலங்கைக் கடற்படையினர் மீட்டனர். இந்நிலையில், மற்றொரு மீனவரான முனியசாமியின் உடல் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இதனை மீட்ட இலங்கைக் கடற்படையினர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.


உயிரிழந்த மீனவர் முனியசாமியின் உடலை ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான இலந்தை கூட்டத்திற்குக் கொண்டு வர, அவரது மகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று முனியசாமியின் உடல் இலங்கையிலிருந்து விமானம்மூலம் கொண்டுவரப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட முனியசாமியின் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர்.

அஞ்சலி


 இதையடுத்து, அங்கிருந்து வாகனத்தில் எடுத்துவரப்பட்ட முனியசாமியின் உடல், அவரது சொந்த ஊரான இலந்தை கூட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பா.ஜ.க மாநில துணைத் தலைவர் குப்புராமு, மாவட்டச் செயலாளர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து, மீனவர் முனியசாமியின் இறுதிச்சடங்கு நடந்தது.