குடிநீர் தொட்டியில் மிதந்த ஆண் சடலம் - நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க ஆர்ப்பாட்டம் | DMK protest against Ramanathapuram municipal administration

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (18/01/2019)

குடிநீர் தொட்டியில் மிதந்த ஆண் சடலம் - நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் நகராட்சியின் சீர்கேடுகளைக் கண்டித்து  தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் நகராட்சி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் திரண்டனர்.

திமுக ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் இயங்கும் நகராட்சிக்கு, நிரந்தர ஆணையர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி நகராட்சி நிர்வாகம் நிர்வகிக்கும் குடிநீர் மேல் நிலைத் தொட்டியில் இருந்து ஆண் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல், 3 நாள்களுக்கும் மேலாக குடிநீர் தொட்டியில் மிதந்த நிலையில், அங்கிருந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அச்சம் நிலவியது.

இத்தகைய  நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து,  ராமநாதபுரம் தி.மு.க-வினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டப் பொறுப்பாளர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் திசை வீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் கார்மேகம் வரவேற்றார். 

திமுக அரசு கொண்டுவந்த பாதாள சாக்கடை திட்டத்தை முறையாகப் பராமரிக்க  வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்;  போதிய அளவு துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்; இருள் சூழ்ந்த இடங்களில் எரியாத மின் விளக்குகள் மீண்டும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிறப்பு  இறப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறும் அவல நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;  இலவச பொதுக் கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்;  ஓராண்டாக காலியாக உள்ள ஆணையர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகரச் செயலாளர்கள்,  பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் பங்கேற்றனர்.