தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய புள்ளிமான் - உணவுக்கான தேடலில் திசை மாறியதா? | spotted deer For the first time in the coast of Dhanushkodi, where the falls off the shore,

வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (18/01/2019)

கடைசி தொடர்பு:23:33 (18/01/2019)

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய புள்ளிமான் - உணவுக்கான தேடலில் திசை மாறியதா?

தனுஷ்கோடி கடலோரத்தில், உயிரிழந்த நிலையில் புள்ளிமான் ஒன்று கரை ஒதுங்கிக்கிடந்தது. திசை மாறி வந்த அந்தப் புள்ளிமான், கடல் நீரைப் பருகியதால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

புள்ளி மான்கள்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில், நடராஜபுரம் கிராமம் தொடங்கி முகுந்தராயர் சத்திரம் வரை இரு புறங்களிலும் அடர்ந்த சவுக்கு மரக் காடுகள் உள்ளன. கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், வனத்துறையினர் இந்த சவுக்கு வனத்தை உருவாக்கிப் பாதுகாத்துவருகின்றனர். இந்த சவுக்கு வனப்பகுதியில், ஆங்காங்கே குதிரைகள் காணப்படும்.

 இந்நிலையில், தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள ஒத்தைப்பட்டி என்ற இடத்தின் கடலோரப் பகுதியில், ஆண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. சுமார் 2 வயது இருக்கும். தனுஷ்கோடி சவுக்கு வனப் பகுதியில் குதிரைகள் மட்டுமே காணப்படும் நிலையில், முதல் முறையாகப் புள்ளிமான் ஒன்று இறந்து கரை ஒதுங்கிக் கிடந்தது. மானை கைப்பற்றிய வனத்துறையினர், உடல் ஆய்வுக்குப் பின் அப்பகுதியிலேயே அதைப் புதைத்தனர்.
 

மீன் இனங்கள் மட்டுமே கரை ஒதுங்கும் தனுஷ்கோடி பகுதிக்கு, அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் திசை மாறி வந்திருக்கலாம் எனவும், இந்நிலையில், தாகம் ஏற்பட்ட  அந்தப் புள்ளிமான், கடல் நீரைக் குடித்திருக்கலாம் எனவும், இதனால்  உயிரிழப்பு ஏற்பட்டு, கடல் அலையால் இப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.