`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்’ - மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி? | vck party member threatened his daughter in law

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:09:25 (19/01/2019)

`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்’ - மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி?

`தமிழ்நாடு முழுக்க உள்ள ரவுடிகளை எனக்குத் தெரியும். நான் நினைச்சா குடும்பத்தோட உங்களை முடிச்சிடுவேன்னு மிரட்டுகிறார்' என வி.சி.க நிர்வாகியின் மருமகள், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீரோடு கொடுத்த புகார்மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வி சி க நிர்வாகி மருமகள்

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் - ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளரான விநாயகமூர்த்தியின் மருமகளான இவர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார்மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், `என்னுடைய கணவரும் என் கணவர் வீட்டாரும் என்னிடம் வரதட்சணை கேட்டு அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இதை வெளியே கூறினால், குடும்பத்தோடு சேர்த்து கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தார். என்ன நடந்தது எனப் புகார் அளித்த வி.சி.க நிர்வாகியின் மருமகள் புவனேஸ்வரியிடம் பேசினோம். ``எனக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் - ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தியின் மகன் வெங்கடேஷ்க்கும் 2015-ம் ஆண்டு வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

புவனேஸ்வரி

திருமணமாகி 5 வது மாதத்திலிருந்தே என்னுடைய கணவர் குடித்துவிட்டு அடித்தும், வரதட்சணை கேட்டு அவருடைய குடும்பத்தார் கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இரண்டுமே பெண் குழந்தைகள் என்பதால், என்னை வீட்டுக்குள் வர வேண்டாம் எனத் துரத்துகின்றனர். நான் இப்போது என்னுடைய அம்மா வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால், என்னுடைய கணவரோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வந்து கூத்தடித்துக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டிக்க வேண்டிய என்னுடைய மாமனாரும் அவருடைய குடும்பத்தாரும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

`எனக்கு தமிழ்நாட்டுல உள்ள பல ரவுடிகளைத் தெரியும். இந்த விவகாரத்தை நீ பெரிதுபடுத்தினால் அவங்களை வச்சி குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்' என என்னுடைய மாமனார் விநாயகமூர்த்தி என்னை மிரட்டுகிறார். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. போலீஸ்கிட்ட புகார் கொடுக்கப்போனா, அவங்க ரொம்ப யோசனைக்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணாங்க. பணபலத்தாலும் அரசியல் பலத்தாலும் எங்களை அடக்க நினைக்குறாங்க. எனக்கும் என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் நியாயம் கிடைக்கணும். இந்தப் பிரச்னையை இத்தோட விடமாட்டோம். வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடமும் எடுத்துட்டுப் போவோம்" என்றார். இந்தப் புகார் மனு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.