200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி! | mutton biriyani served as prasad for devotees this munishwarar temple

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:29 (19/01/2019)

200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி!

துரை முனியாண்டி விலாஸ்... இந்தப் பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும். தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம்  முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பரவிக்கிடக்கின்றன. முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி என்ற கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு. 

பிரியாணி

வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது. வடக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, சுப்பா நாயுடு என்பவரின் கனவில் வந்த முனீஸ்வரர், `அன்னம் விற்று பிழைப்பை பார்த்துக்கொள்' என்று கூறினாராம். முனீஸ்வரரின் வாக்கை ஏற்று 1970-ம் ஆண்டில் காரைக்குடியில் சுப்பாராவ் முதன்முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டலைத் தொடங்கினார். தொடர்ந்து, மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உருவாகின. வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும்கூட முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். 

வடக்கம்பட்டி பிரியாணி

பிழைக்க  புதிய வழி காட்டி முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு ஒவ்வோர் ஆண்டும் வடக்கம்பட்டி மக்கள் விழா எடுக்கின்றனர். 83 வது ஆண்டாக இந்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதி விழா நடைபெறுகிறது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக மட்டன் பிரியாணி வழங்கப்படுவதும் சிறப்பு அம்சம்.

இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300 சேவல்கள், 2,000 கிலோ அரிசி கொண்டு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக 50 பிரமாண்ட பாத்திரங்களில் கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் சமையல் நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்குப் பிரியாணி படைக்கப்படும். பிறகு, காலை 5 மணி முதலே பக்தர்களுக்குப் பிரியாணி அன்னதானமாக வழங்கப்படும். முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை யார் வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க