`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு! | vaiko will opposes to pm modi's madurai visit

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:16 (19/01/2019)

`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவேன் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் தெரிவித்தார்.

வைகோ

தஞ்சாவூர் ம.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருப்பவர் உதயகுமார். இவரின் மகள் திருமணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, ``டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கெயில் கேஷ், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு, அந்தத் திட்டத்துக்கு ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகும் வேதாந்தா நிர்வாகத்துக்கு மீண்டும் இரண்டு இடத்தில் அனுமதியளித்து, வேளாண் மண்டலமான டெல்டாவை பெட்ரோலிய பொருளாதார மண்டலமாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. மேக்கே தாட்டூவில் கர்நாடக அணை கட்டுவதை உச்ச நீதிமன்றம் தடுத்தாலும் நிச்சயம் அவர்கள் அணையைக் கட்டுவது உறுதி. இதற்குத் திட்டம் வகுத்துக்கொடுத்தது பி.ஜே.பி அரசுதான். 

2015-ம் ஆண்டு மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் இரண்டு நாள் கர்நாடக அமைச்சர்கள் எல்லோரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியது. அதில் பி.ஜே.பி அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்கமாட்டோம் எனத் தெரிவித்த நிலையில், அவர்களும் மறைமுகமாகப் பணிகளைத் தொடங்கினார்கள். மீத்தேன் போன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் வரும். அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் வருவாய் கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, கஜா புயலால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்வையிடவில்லை. இப்படியாகத் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் விளைவித்து வருகிறார் பிரதமர். 

வைகோ

எனவே வரும் 27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமருக்கு ம.தி.மு.க சார்பில் எனது தலைமையில் கறுப்புக்கொடி காட்டுவேன். சி.ஐ.டி-களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலுான் பறக்கவிடுவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 65,500 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இந்தப் பணிக்கு மாற்றுக்கட்சிகளில் இருந்து ஆட்களை நிர்வாகிகள் பிடிக்க வேண்டாம். வரும் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்களுக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும், பத்திரிகைகள் கேலி செய்தாலும் தி.மு.க-தான் ஆட்சியமைக்கும். இதற்கு ம.தி.மு.க முழுமையாகப் பணியாற்றும். ம.தி.மு.க-வில் கோஷ்டி பூசல் என்பது கிடையாது. ஒருசில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வருகின்றன. அவர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க