பொங்கலை வழியனுப்பும் விழா! - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள் | Dindigul village people's worship

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:11:00 (19/01/2019)

பொங்கலை வழியனுப்பும் விழா! - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்

பொங்கல் பண்டிகை வேரை நோக்கி விழுதுகளை வரவழைக்கும் விழா. பிழைப்பு தேடி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பொங்கலுக்குத் தாய் கிராமத்துக்கு வந்து, உறவுகளுடன் இணையும் அற்புத விழா. பொங்கல் பண்டிகையை பலரும் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். ஆனால், இத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொங்கல் பண்டிகைக்கு நன்றி தெரிக்கும் வகையில் விழா எடுக்கிறார்கள், கீழக்கோவில்பட்டி மக்கள்.

பொங்கல் 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது கீழக்கோவில்பட்டி. இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பழங்கால பழக்க வழக்கம் மாற்றாமல் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். தை பிறப்பதற்கு முன்னர் மார்கழி மாதத்தில் வீட்டின் முன்பு கோலத்தில் வைக்கப்படும் பூசணி பூவைச் சேகரிப்பார்கள். மார்கழி மாதத்தின் கடைசி நாளில், பசு மாட்டுச் சாணத்துடன் ஏற்கெனவே சேகரித்து வைத்திருக்கும் பூசணிப் பூவையும் சேர்த்து எருவறட்டியாகத் தட்டிக் காய வைக்கின்றனர்.

பொங்கல்

பொங்கல் பண்டிகை முடிந்து மூன்றாவது நாள் பொங்கலை வழியனுப்பும் திருவிழா நடத்துகிறார்கள். ஊர் பொதுமக்கள் பூஜை பொருள்களுடன் பூ எருவறட்டியையும் இங்குள்ள முத்தாலம்மன் கோயிலுக்குக் கொண்டு வருகிறார்கள். கோயிலில் கூடும் பெண்கள் கும்மியடித்து, பொங்கல் சிறப்பு குறித்து வாழ்த்துப் பாடல்களைப் பாடுகிறார்கள். இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பொங்கல் பண்டிகை குறித்து விளக்கிச் சொல்லி, அவர்களுக்கும் கும்மி அடிக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். பிறகு, அங்கிருந்து, பூ எருவாட்டியை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு ஆற்றுக்குச் செல்கிறார்கள். அங்கு, நில மகளுக்கு நன்றி சொல்லி, விவசாயம் செழிக்க வேண்டும்... மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டு, பூ எருவறட்டியில் தீபம் ஏற்றுகிறார்கள். வழிபட்டு முடிந்தவுடன், பூ எருவறட்டியை ஆற்றில் விடுகின்றனர். ஒவ்வொரு பொங்கலுக்கும் மக்கள் மனமகிழ்வோடு இருக்க வேண்டும்.

பொங்கல் 

`எம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பொங்கல் பண்டிகையே உனக்கு நன்றி... உன்னைக் கங்கையுடன் சேர்த்து வழியனுப்பி வைக்கிறோம். அடுத்த ஆண்டும் வா தை மகளே... எம் மக்களுக்கு எல்லா வளங்கையும் தா பொங்கல் பண்டிகையே' என நன்றி கூறி அனுப்பி வைக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் தொன்றுதொட்டு பழமை மாறாமல் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க