உயிருக்குப்போராடும் அப்பா! - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன் | Youth marries in lover in chennai hospital, where his father admitted

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (19/01/2019)

கடைசி தொடர்பு:14:28 (19/01/2019)

உயிருக்குப்போராடும் அப்பா! - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்

திருமணம் செய்த சதீஷ் சித்ரா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற அவசர திருமணத்தை நடத்தியுள்ளார் அவரின் மகன். இந்தத் திருமணம் சோகத்திலும் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சுதேஷ் (60). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ் (28) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். சதீஷுக்கும் திருவொற்றியூர் சந்நிதித் தெருவைச் சேர்ந்த சித்ராவுக்கும் திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். இவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார் சுதேஷ். அப்போது அவ்வழியாகச் சென்ற மின்சார ரயில் மோதிய விபத்தில் சுதேஷ் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில் மோதியதில் சுதேஷுக்கு இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் இன்று அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். 

திருமணம் செய்த சதீஷ் சித்ரா

முக்கியமான பெரும் அறுவைசிகிச்சை என்பதால் அவரின் உறவினர்கள் கவலையடைந்தனர். குறிப்பாக, அறுவை சிகிச்சையின்போது தந்தைக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அவரின் ஆசீர்வாதம் தனக்குக் கிடைக்காதே என்று புதுமாப்பிள்ளை சதீஷ் வருந்தினார். இதனால், தந்தை கண்முன்னே திருமணத்தை நடத்த அவர் முடிவு செய்தார். தன்னுடைய முடிவை இருவீட்டினரிடமும் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். குறிப்பாக, மணமகள் சித்ராவும் ஓகே சொன்னார். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நேற்றிரவு அவசர திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கோயிலுக்கு மணமகன் சதீஷ், மணமகள் சித்ராவும் உறவினர்களும் வந்தனர். கோயிலின் நடைசாத்தப்பட்ட நிலையில் அவர்கள் விநாயகரை வணங்கினர். தாலியை எடுத்து சதீஷிடம் கொடுக்கப்பட அதை வாங்கிய அவர், சித்ராவின் கழுத்தில் தாலி கட்டினார். பிறகு, பெரியவர்கள் காலில் விழுந்து மணமக்கள் வணங்கினர். அதன் பிறகு சித்ராவுக்கு சதீஷ் மெட்டி அணிவித்தார். இந்தத் திருமணத்தின்போது இருவரும் மாலைகூட அணியவில்லை. இந்த நிகழ்வுகளை உறவினர்கள் தங்களின் செல்போன்களின் வீடியோ, போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். திருமணம் குறித்த தகவலை சுதேஷுக்கு உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது, அவர் மணமக்களை ஆசீர்வதித்தார். இந்தச் சம்பவத்தைக் கண்ட அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். 

திருமணம் செய்த சதீஷ் சித்ரா

இதுகுறித்து புதுமாப்பிள்ளை சதீஷின் அம்மா மல்லிகா கூறுகையில், ``என்னுடைய மகனின் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்த சமயத்தில்தான் என்னுடைய கணவர், ரயில் மோதி விபத்தில் சிக்கிவிட்டார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. இந்தச் சமயத்தில்தான் அவருக்கு மேஜர் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர். அதற்குள் மகனையும் மருமகளையும் திருமணக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டோம். உடனடியாக ஆஸ்பத்திரி வளாகத்திலேயே சிம்பிளாகத் திருமணத்தை நடத்தினோம், அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்து நல்லபடியாகத் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்றார். 

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் டீன் பொன்னம்பல நமச்சிவாயத்திடம் பேசினோம். ``சுதேஷின் மகன் சதீஷ் மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்துகொள்வது தொடர்பாக என்னிடம் அனுமதி கேட்டனர். சட்டச்சிக்கல்கள் எதுவும் இல்லாததாலும் சென்டிமென்ட் திருமணம் என்பதால் அனுமதி வழங்கினேன். திருமணத்தையும் அவர்கள் சிம்பிளாக முடித்துவிட்டனர். சுதேஷுக்கு இன்று அறுவைசிகிச்சை நடந்திருக்கும். அதுதொடர்பாக மருத்துவர்களிடம் விசாரிக்கவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்’ என்றார்.

திடீரென மருத்துவமனையில் நடத்தப்பட்ட திருமணத்தைக் கண்டவர்கள் ஆச்சர்யமடைந்தனர். விவரம் தெரிந்தபிறகு மணமக்களை அவர்களும் வாழ்த்தினர்.